×

ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா; இன்று நடை அடைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு இன்று தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேக வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை அடைக்கப்பட்டது.ராமேஸ்வரம் கோயில் வரலாற்று நிகழ்வை சித்தரிக்கும் வகையில் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி இந்தாண்டு பிரதிஷ்டை திருவிழா நேற்று துவங்கியது. விழாவின் 2ம் நாளான இன்று கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்க பூஜையும், பின்னர் கால பூஜைகளும் நடந்தன.

தொடர்ந்து காலை 7 மணிக்கு ஸ்ரீராமர், விபீஷணர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கோதண்டராமர் கோயிலுக்கு எழுந்தருளல் நடந்தது. நகர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த ஸ்ரீராமர், சீதா, லெட்சுமணன், அனுமன் உள்ளிட்ட மூர்த்திகள்  பகல் 11 மணியளவில் கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அங்கு மதியம் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மதியம் 1 மணியளவில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டுதல் வைபவம் நடந்தது. கோயில் உதயகுமார் குருக்கள் விபீஷணருக்கு பட்டு அங்கவஸ்திரத்தினால் பரிவட்டம் கட்டி பட்டாபிஷேக வைபவத்தை நடத்தி வைத்தார். பின் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோயில் இணை கமிஷனர் கல்யாணி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை சுவாமி புறப்பாடு நடந்தவுடன் காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. பகல் முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டது. பக்தர்கள் தீர்த்தமாடவும் அனுமதிக்கப்படவில்லை. விபீஷணர் பட்டாபிஷேக விழா முடிந்து சுவாமி, அம்பாள் கோயிலுக்கு திரும்பியவுடன், மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்படும். 3ம் நாள் விழாவையொட்டி நாளை மதியம் 12 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் சுவாமி சன்னதியில் அனுமன் லிங்கம் எடுத்து வரும் நிகழ்ச்சியம், ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியும் நடைபெறும்.

Tags : Ramalinga ,dedication ceremony ,Rameshwaram Temple Walking , Rameshwaram Temple, Ramalinga Dedication Festival
× RELATED வடலூர் சத்திய தருமச்சாலை 158வது ஆண்டு தொடக்க விழா