×

வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம், பினாமி சொத்து விவரம் சமர்ப்பிக்க பாகிஸ்தானியர்களுக்கு கெடு

இஸ்லாமாபாத்: வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம், பினாமி கணக்குகள், சொத்து விவரங்களை பாகிஸ்தானியர்கள், ஜூன் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. சர்வதேச நிதியம் கூட, பாகிஸ்தான் கேட்ட நிதியை தருவதாக இல்லை. இந்த சூழ்நிலையில், கருப்பு பணம், பினாமி சொத்துக்களை ஒழிக்கவும், வரி வருவாயை அதிகரிக்கவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் அரசு நாளை தாக்கல் செய்கிறது. இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் இம்ரான்கான் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:

நம் நாடு சிறந்த நாடாக வேண்டுமென்றால் நமது ேபாக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் வரி செலுத்தாவிட்டால் நாடு முன்னேற்றம் அடையாது. எனவே, சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தங்களிடம் உள்ள பினாமி சொத்துக்கள், வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பினாமி வங்கிக் கணக்குகள், கருப்புப் பணம் உள்ளிட்ட விவரங்களை ஜூன் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க ேவண்டும். அதன் பிறகு உங்களுக்கு அவகாசம் வழங்கப்பட மாட்டாது. இப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. யாரிடம் பினாமி கணக்கு, சொத்துக்கள் உள்ளன என்ற விவரம் அரசிடம் உள்ளது. எனவே யாரும் மறைக்க வேண்டாம். நம் நாடு மற்றும் நமது குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளுங்கள். நாடு சொந்த காலில் நின்றால்தான் மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க முடியும். கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் கடன் 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. ஆண்டு வரி வசூல் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில் பாதிக்கு மேல் கடன் அடைப்பதிலேயே போய்விடுகிறது என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அரசு கடந்த மே மாதத்திலேயே வரி மன்னிப்பு திட்டம் மற்றும் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கும் திட்டத்தை அறிவித்தது. இதற்கான அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. இதில் கணக்கில் காட்டாத செலவு, விற்பனை, சொத்துக்களை சமர்ப்பித்து ஓரளவு வரியை செலுத்தி அவற்றை கணக்கில் கொண்டு வந்து விடலாம். இதற்கு 45 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான வரியை ஜூன் 30ம் தேதி வரை செலுத்த வேண்டும். தற்போது, சொத்து விவரங்களை சமர்ப்பிக்குமாறு பிரதமர் இம்ரான்கான் இரண்டாவது முறையாக மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : property ,Pakistan , Black money ,stashed abroad,Pakistan property ,proxy property
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...