×

சேப்பாக்கம் லாட்ஜில் பரபரப்பு மனைவி, குழந்தை, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் பலி

சென்னை: சேப்பாக்கம் தனியார் விடுதியில் மனைவி, குழந்தை மற்றும் கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். மனைவி, குழந்தை உட்பட 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அருகே உள்ள மாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (31), ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்துள்ளார். இவரது மனைவி புனிதா ராணி (29), தம்பதியின் மகள் ஜெர்சி (3). இதனிடையே, ஜெகன் வேலை தேடி அலைந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சரண்யா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த சரண்யாவின் கணவன் வைகுண்ட ரமேஷ், மனைவியை எச்சரித்துள்ளார். இதனால், சரண்யா கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு ஜெகனுடன் வந்து விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், இரு வீட்டார் சேர்ந்து ஜெகனிடம் இருந்து சரண்யாவை பிரித்து, அவரது கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில், ஜெகன் வேலை தேடி தனது மனைவி, மகளுடன் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். இதை அறிந்த சரண்யா, தானும் உடன் வருவேன் என்று கூறியுள்ளார். பின்னர் கடந்த 7ம் தேதி  அனைவரும் சென்னை வந்தனர். சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் காலை, ஜெகன் சென்னையில் உள்ள தனது நண்பர் அர்ஜூன் என்பவரை சந்தித்து, ‘‘நான் குடும்பத்துடன் வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளேன். நீ தான் ஏதாவது ஒரு வேலை வாங்கி தர வேண்டும்,’’ என தெரிவித்துள்ளார். அதற்கு அவர், ஏதாவது வேலை இருந்தால் நிச்சயம் சேர்த்து விடுகிறேன், என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஜெகனை பார்க்க அர்ஜூன் லாட்ஜ்க்கு வந்துள்ளார். அங்கு, அறையின் முன் நின்றிருந்த ஜெகன், மயக்க நிலையில் அர்ஜூனிடம் பேசியுள்ளார். அப்போது ஜெகனின் குழந்தை உள்ளே அழுது கொண்டே இருந்தது.

இதை கவனித்த அர்ஜூன், சந்தேகமடைந்து அறைக்கு உள்ளே செல்ல முயன்றார். உடனே ஜெகன் தனது மனைவி, குழந்தை மற்றும் கள்ளக்காதலியுடன் கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அதிர்ச்சியடைந்த அர்ஜூன், சம்பவம் குறித்து லாட்ஜ் ஊழியர்களிடம் தெரிவித்தார். அவர்கள் அறைக்கு வந்து கழிவறையின் கதவை உடைத்து பார்த்த போது, 4 பேரும் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்தபடி மயங்கி கிடந்தது தெரிந்தது. அருகில் வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருந்தது. இதுகுறித்து, லாட்ஜ் ஊழியர்கள் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, 4 பேரையும் மீட்டு கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜெகன், அவரது மனைவி புனிதா ராணி, கள்ளக்காதலி சரண்யா ஆகியோரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், குழந்தை ஜெர்சியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கும் அனுப்பினர்.

அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை ெபற்று வந்த ஜெகன் நேற்று காலை உயிரிழந்தார். மனைவி புனிதா ராணி மற்றும் கள்ளக்காதலி சரண்யா, குழந்தை ஜெர்சி ஆகியோர் சுய நினைவு இன்றி சிகிச்சை ெபற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஜெகன் உறவினர்கள் மற்றும் சரண்யாவின் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்னை வந்தால் தான் 4 பேரும் தற்கொலைக்கு முயன்றது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மனைவி, குழந்தை மற்றும் கள்ளக்காதலியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயன்று, அதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Wife killed by poisoned , child, kallakadali
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...