×

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் யுவராஜ்

மும்பை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். கடந்த 2000வது ஆண்டு கென்யா அணிக்கு எதிராக நைரோபியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகமான யுவராஜ் (37 வயது), இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன் (அதிகம் 169, சராசரி 33.92, சதம் 3, அரை சதம் 11) மற்றும் 9 விக்கெட் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலித்த அவர் 304 போட்டிகளில் விளையாடி 8071 ரன் (அதிகம் 150, சராசரி 36.55, சதம் 14, அரை சதம் 52) மற்றும் 111 விக்கெட் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 58 சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கியுள்ள யுவராஜ், அவற்றில் 1177 ரன் (அதிகம் 77*, சராசரி 28.02, அரை சதம் 8), 28 விக்கெட் எடுத்துள்ளார்.

இடது கை வீரரான இவர் ஐபிஎல் டி20, ரஞ்சி கோப்பை உட்பட பல்வேறு தொடர்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளார். மும்பையில் நேற்று தனது ஓய்வு முடிவு குறித்து அறிவித்த யுவராஜ் கூறுகையில், ‘இந்திய அணிக்காக 400 போட்டிகளில் விளையாடியதில் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும். கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது இது பற்றி நான் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இதில் இருந்து விலகிச் செல்ல முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. நான் இங்கு நிற்பதற்கும் அது தான் காரணம். கிரிக்கெட்டுடன் எனக்கு இருந்தது விருப்பும் வெறுப்பும் கலந்த ஒரு தனித்துவமான உறவு. அதை முழுமையாக என்னால் விளக்க முடியாது. வாழ்க்கையில் போராட வேண்டும் என்பதை இந்த விளையாட்டு தான் எனக்கு கற்றுக் கொடுத்தது. இதில் வெற்றி பெற்றதை விடவும் அதிகமாக தோற்றிருக்கிறேன். ஆனால், ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிட்டதில்லை’ என்றார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் அதிலிருந்து போராடி மீண்டதுடன், மறுபடியும் களமிறங்கி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கினார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் பிக்பாஷ் டி20, கரீபியன் பிரிமியர் லீக் உட்பட ஐசிசி அங்கீகாரம் பெற்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளார். முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், கங்குலி, லஷ்மண், டிராவிட், சேவக் உள்ளிட்டோரும், தற்போதைய இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, சக வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் பிரபலங்கள் யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Yuvaraj , Yuvaraj, retired ,international cricket
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...