×

2021ம் ஆண்டு முதல் நிரப்ப திட்டம் கூடங்குளம் அணு உலைகளில் புதிய எரிபொருள்

நெல்லை: கூடங்குளம் அணு உலைகளில் 2021 முதல் புதிய எரிபொருள் நிரப்பப்பட உள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட தலா இரண்டு அணு உலைகளில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 3, 4 அணு உலைகள் கட்டுமானப் பணியும் நடந்து வருகிறது. இது தவிர 5, 6 அணு உலைகளும் கூடங்குளத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கூடங்குளம் அணு மின் நிலையத்தை அடுத்துள்ள பகுதியில் எரிபொருள் கழிவு வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் விரைவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் கூடங்குளத்தில் தற்போதுள்ள அணு உலைகளில் 2021 முதல் ‘டிவிஎஸ் - 2 எம்’’ எனும் புதிய எரிபொருள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எரிபொருளை ரஷ்யாவின் ரோஸ்டாம் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ‘டிவிஇஎல்’’ எரிபொருள் நிறுவனம் சப்ளை செய்ய உள்ளது. ஏற்கனவே யுரேனியம் எரிகோல்கள் கூடங்குளம் அணு உலைகளில் நிரப்பப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த புதிய எரிபொருள் மூலம் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஓராண்டுக்கு ஒரு முறை எரிபொருள் நிரப்புவதற்கு பதிலாக புதிய எரிபொருள் ஒன்றரை ஆண்டுகளுக்கு (18 மாதம்) ஒரு முறை நிரப்பினால் போதுமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடங்குளத்தில் புதிய எரிபொருள் நிரப்பினாலும் பிற கலன்களில் மாற்றங்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனினும் இதுதொடர்பாக அணு சக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் ஒப்புதலையும், பொதுமக்கள் கருத்துக்களையும் பெற வேண்டும் என அணு சக்தி கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : reactors ,Kudankulam , 2021, Kudankulam nuclear power plant, new fuel
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது