×

6...6...6...6...6...6... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி வீரர் யுவராஜ் சிங் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். யுவராஜ் சிங் ஓய்வு பற்றிய அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் என்னை நம்புவதை நான் எப்போதும் நிறுத்தியது இல்லை என்று யுவராஜ் சிங் உருக்கமாக தெரிவித்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தமது அடுத்த பணி என்று தெரிவித்தார்.

சண்டிகரில் 1981-ம் ஆண்டு இதே நாளில் பிறந்த யுவராஜ் சிங் இந்திய அணிக்காக இதுவரை 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதம், 52 அரைசதம் உட்பட 8,701 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் விளையாடி 8 அரைசதம் உட்பட 1,117 ரன்களை குவித்துள்ளார். யுவராஜ் சிங் தனது 13 வயதில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கினார். அதன் பின்னர் ரஞ்சி போட்டியில் களமிறங்கிய அவர், தனது முதல் போட்டியில் டக்-அவுட் ஆனார். ஆனால் 1999-ம் ஆண்டு பிகார் அணிக்கு எதிரான கூச் பெஹார் டிராபியின் இறுதி போட்டியில் 358 ரன்கள் விளாசி அசத்தினர்.

2000-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணியில் யுவராஜ் சிங் களமிறங்கினார். அத்தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்ததோடு தொடர் நாயகன் விருதையும் யுவராஜ்சிங் தட்டிச் சென்றார். இவரது ஆட்டத்தை கண்ட இந்தியத் தேர்வுக்குழுவினர் அதே ஆண்டில் நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் தொடரில் இந்திய அணிக்காக விளையாட யுவராஜை தேர்வு செய்தனர். அந்தத் தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி அனைவரையும் அசத்தினார்.

யுவராஜ் சிங் பேட்டிங் மட்டுமல்லாது பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். இதனால் இந்திய அணியில் மட்டுமல்லாது ரசிகர்களின் மனதிலும் தமக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். யுவராஜ் சிங் என்றாலே நம் அனைவருக்கும் குறிப்பாக நினைவில் வருவது 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையில் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரின் ஆறு பந்திலும் ஆறு சிக்ஸர்களை பறக்க விட்டது தான். முதல் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதில் யுவராஜ் சிங்கின் பங்கு மிகவும் முக்கியமானது.

சில நேரங்களில் பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங் மற்றும் பீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு தனது முழுபங்கை அளிக்க அவர் கடும் முயற்சி எடுப்பார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில், களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தனது பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அசத்தி தொடர் நாயகன் விருதையும் வென்றார். உலககோப்பையின் அனைத்து போட்டிகளிலும் இவரது பங்களிப்பால் இந்திய வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது.

புற்றுநோய் பாதிப்பு

2011 உலகக் கோப்பையின் போதே அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் சரிவாக யுவராஜ் சிங், நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் முந்தைய நாளில் யுவராஜ் சிங் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இருப்பினும் தமக்கு என்ன நடந்தாலும் அடுத்த நாள் போட்டியில் கண்டிப்பாக விளையாடுவேன் என யுவராஜ் கூறியதாக ஹர்பஜன் சிங் பின்னாளில் தெரிவித்திருந்தார்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த யுவராஜ்

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த யுவராஜ், அவ்வப்போது அணியில் இடம்பிடித்தாலும் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் நோக்கில் யுவிகேன் (YOUWECAN) என்ற பெயரில்  அறக்கட்டளை ஒன்றையும் யுவராஜ் சிங் நடத்தி வருகிறார். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தமது அடுத்த பணி என்று தெரிவித்துள்ளார்.


Tags : Yuvraj Singh ,retirement ,announcement , Yuvraj Singh, Ceylon King, Indian cricket, cricket, international cricket, Yuvraj Singh retirement
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...