×

நாகை மாவட்டத்தில் கடும் வறட்சியால் 10 லட்சம் கால்நடைகள் தண்ணீரின்றி தவிப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் கடும் வறட்சியினால் 10 லட்சம் கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீரின்றி தவித்து வருகிறது. கடந்த சில ஆண்டு காலமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. எனவே குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக நாகை மாவட்டத்தில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் மனிதர்கள் மட்டுமன்றி மாடுகள், ஆடுகள், குதிரைகள், கோழிகள் என பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகையில் ஏரி, குளங்கள் வாய்க்கால்கள் என எதுவும் தூர்வாரப்படாமல் வறண்டு காணப்படுகிறது. கோடை மழையும் கைவிட்டதால் தங்களது கால்நடைகளை வளர்க்க முடியாமல் கால்நடை வளர்ப்பவர்கள் தவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் கொளுத்தும் வெயிலின் கொடூரத்தால், மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், ஆடுகள் தண்ணீருக்காக குளத்திலும் குட்டையிலும் கொஞ்சம் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை குடித்து உயிர் வாழக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. சம்பா நெல் மற்றும் சிறு குறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் மீதமுள்ள கட்டை தீவனங்களை நம்பி காடுகளில் இரைதேடும் கால்நடைகள், தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடைகள் வளர்ப்பவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நாகை மாவட்டதில் கால்நடை மேய்பவர்கள் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி என நாகை மாவட்டம் முழுவதும் ஒன்பது லட்சத்து 83 ஆயிரத்து 547 கால்நடைகள் மற்றும் பிராணிகள் தண்ணீரின்றி தவித்து வருகிறது. மனிதர்கள் காசு கொடுத்து வாங்கி தண்ணீர் குடித்து விடுகின்றனர். ஆனால் கால்நடைகள் எப்படி தண்ணீர் குடிக்கும். குளம், குட்டைகளில் தண்ணீர் இருந்தால் தான் கால்நடைகள் அங்கு சென்று தண்ணீர் குடிக்கும். கால்நடை வளர்ப்பவர்களும் அதற்கு தண்ணீர் வைப்பதில்லை. கடுமையான வறட்சியின் காரணமாக கால்நடைகள் தண்ணீர் இல்லாமல் அங்கும், இங்கும் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு என்ன தான் தண்ணீர் கொடுத்தாலும் குளம், குட்டைகளில் உள்ள தண்ணீரை கால்நடைகள் குடிப்பது போல் வராது. இந்த வறட்சியை கால்நடைகள் சமாளிப்பது கடினம் தான்.

இதுகுறித்து நாகை மாவட்டத்தில் கால்நடை உரிமையாளர்கள் கூறியதாவது: கோடையின் கொடுமையால் கால்நடைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் மட்டும் கிடைக்காமல் போவதுடன் கோடை வெயிலின் தாக்கத்தால் கால்நடைகளுக்கு எடை குறைவும் ஏற்படுகிறது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாக்க டேங்கர் மூலம் தண்ணீரை விலை கொடுத்தும், குளம் குட்டைகளில் தேங்கி கிடைக்கும் நீரை கால்நடைகளுக்கு கொடுத்து வருகிறோம். இந்த கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிப்பதற்கு கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். கடைமடையில் உள்ள குளம் குட்டைகள் தூர்வாராமல் வறண்டு காணப்படுவதால் கால்நடைகளுக்கு தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கால்நடைகளை பாதுகாக்க நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக தண்ணீர் விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Tags : Nagai ,drought ,district , Nagai, drought
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...