×

தேர்தல் முடிவுகள், செயல்பாடுகள் குறித்து அதிமுகவினர் யாரும் பேசக்கூடாது: ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

சென்னை: கட்சி குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் அதிமுகவினர் யாரும் பொது வெளியில் பேசக்கூடாது என்று ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இரட்டைத் தலைமை வேண்டாம் என்று அதிமுக எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் வெளிப்படையாக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் ஒப்பற்ற இயக்கம். தலைமைக்கும், கொள்கைக்கும் என்றென்றும் விசுவாசமாய் செயல்படும் தொண்டர்களைக் கொண்டது.

இதை பார்த்து எல்லோரும் வியந்தார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக கட்சிக்குள் சிலர் அதிமுகவின் செயல்பாடுகளைப் பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக கருத்து வெளியிட்டுவருகின்றனர். இது அவ்வளவு வரவேற்கத்தக்கவையாக இல்லை. அதிமுகவினர் ஒவ்வொருவருக்கும் அதிமுக மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது. அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படவேண்டும். கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் தேவை. இவை சாதரணமானவை தான்.

ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டு தான் ஓர் இயக்கத்தை உலகம் எடை போடும். அதிமுகவின் நலன் கருதி சில கருத்துக்களை யார் கூற விரும்பினாலும், அதற்கென ஒரு நேரமும், சந்தர்ப்பமும் செயற்குழு- பொதுக்குழு-ஆலோசனைக் கூட்டம் என்று பல்வேறு வாய்ப்புகளும் இருப்பதை நினைவில் வைக்கவும். அதிமுகவின் கடைசி தொண்டனின் உணர்வுகளையும், அவனது எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தான் நம் பணிகள் உள்ளன. அதிமுகவினர் இனி அதிமுக நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றியோ, அதிமுக முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களைக் கூறாமல் ஜெயலலிதா வழிகாட்டுதலில் செயல்பட்டதைப் போன்றே தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nobody , Election Results, Activities, AIADMK, Nobody, Speak, OBS, EPS
× RELATED மோடி யாரென்றே தெரியாது!: அமெரிக்காவில்...