வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விதிமீறும் கனரக லாரிகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளான திருமுடிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய பகுதிகளில் தொழிற்பூங்கா (சிப்காட்) அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லவும் கனரக லாரிகள் அதிகளில் வந்து செல்கின்றன. இந்த கனரக வாகனங்கள் எளிதில் வந்து செல்லவும், உள்ளூர், வெளியூர் வாகன ஓட்டிகள் நகர போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், விரைந்து செல்லும் வகையில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை மற்றும் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலைகள் கொண்டு வரப்பட்டன. தற்போது இந்த சாலைகளை பயன்படுத்தி ஏராளமான வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் சென்று வருகின்றன.

இந்நிலையில், சமீப காலமாக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘டிரக் லே பே’ பகுதியில் நிறுத்தப்படாமல், சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த சாலையில் பல இடங்களில் மின் விளக்குகள் எரியாததால்,  இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் இலகுரக மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மீது மோதி, விபத்து ஏற்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை சோமங்கலம் அருகே வெளிவட்ட சாலையில் நின்றிருந்த கனரக வாகனத்தின் மீது மொபட் மோதி குன்றத்தூர் அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்த தந்தை, மகள் இருவரும் பலியாகினர். விதிமீறும் கனரக லாரிகளால் நாளுக்கு நாள் விபத்து அதிகரித்து வரும் நிலையில், இதை தடுக்க வேண்டிய போலீசார், லாரி டிரைவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும், சாலையில் லாரிகள் நிறுத்துவதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Accidents ,road ,Vandalur-Meenjur , Vandalur-Meenjur, Out road, infested, heavy truck, accident
× RELATED விபத்துகளை தடுக்க சாலை குழிகளை மூடுங்கள்