×

ஆயுஷ்மான் திட்டத்தில் கேரளா சேரவில்லையா? பிரதமர் மோடியின் தவறை சுட்டிக் காட்டிய அமைச்சர்

திருவனந்தபுரம்: மத்திய அரசின் ஆயுஷ்மான் சுகாதார திட்டத்தில் கேரளா சேரவில்லை என பிரதமர் மோடி தவறாக குற்றம்சாட்டியிருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா சுட்டிக்காட்டி உள்ளார். கேரளாவின் குருவாயூரில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஏழைகளின் மருத்துவ உதவிக்காக ரூ5 லட்சம் வழங்கும் ‘ஆயுஷ்மான்’ காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் கேரள அரசு இணையாததால் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆயுஷ்மான் திட்டத்தில் கேரளா இணைய வலியுறுத்துகிறேன்,’’ என்றார்.

இது குறித்து பிரதமர் தன் தவறை திருத்திக் கொள்ள வலியுறுத்தி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆயுஷ்மான் திட்டத்தில் கேரளா சேராததால் ஏழை மக்கள் பலனடைய முடியவில்லை என பிரதமர் மோடி கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பிரதமர் தவறாக புரிந்து கொண்டுள்ளார். கடந்த 2018 நவம்பர் 2ம் தேதியே ஆயுஷ்மான் திட்டத்தில் கேரளா இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. முதல்கட்ட தவணையாக மத்திய அரசிடமிருந்து ரூ25 கோடி பெறப்பட்டு, இத்திட்டத்தை மார்ச் 5ம் தேதி முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்து சுகாதார அட்டைகளை வழங்கி உள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் 17 லட்சம் பயனாளிகள் பதிவு செய்து, 1.46 லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், 18.5 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதோடு, காருண்ய ஆரோக்யா சுரகா திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ காப்பீடு திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 41 லட்சம் குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன. எனவே, பிரதமர் மோடி தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags : Kerala ,Narendra Modi ,Ayushmann , Ayushmann, Kerala, Prime Minister Modi, Minister
× RELATED இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில்...