×

வல்லநாடு பழைய ஆற்றுப்பாலம் நினைவு சின்னமாக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செய்துங்கநல்லூர்: வல்லநாடு தாமிரபரணி பழைய பாலத்தை நினைவு சின்னமாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில்  வல்லநாடு அருகே பக்கப்பட்டி ஆற்றுப்பாலம், கடந்த 1956 ம் ஆண்டு கட்டப்பட்டது.    திருநெல்வேலி மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக இருந்த கோபாலசாமி நாயக்கர்,  இப்பகுதியில் பாலத்தை கட்ட ஏற்பாடு செய்தார். மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த பாலம்,   சுமார் 63 வருடங்களை தாண்டியும் பயன்பாட்டிலேயே இருந்தது.  ஆனால் நெல்லை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி  காரணமாக ஒரு வழிச்சாலை பாலமான இந்த பாலத்தை கடக்க முடியாமல் வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகின. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் லாரிகளால் பாலத்தில்  வாகனங்கள் சிக்கி கொள்ளும்போது பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து புதிய பாலம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நான்குவழிச்சாலை திட்டப் பணி, நெல்லை கேடிசி நகர் நான்குவழிச்சாலை மேம்பாலம் அருகே துவங்கி தூத்துக்குடி துறைமுகம் வரை 47 கிமீ தூரத்திற்கு கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.232 கோடி திட்ட மதிப்பில் தொடங்கிய நிலையில் பாதிப்பணி கூட நிறைவு பெறாத நிலையில், ஒப்பந்தக்காரர்  கடந்த 2007ல் பணியை விட்டுச்சென்றார்.  இதனால் வழி நெடுக பாலங்கள் மற்றும் சாலைகள்  பாதியில் பணி நிறுத்தப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு விடுபட்ட பணிகளுக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு மீண்டும் கூடுதல் நிதி ஒதுக்கினர். இதையடுத்து சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக தொடங்கின. மொத்தம் ரூ.320 கோடியில் புதிய திட்ட மதிப்பில் நடைபெற்று வந்த சாலைப்பணியோடு வல்லநாடு பக்கப்பட்டி ஆற்றில் புதிய பாலமும் கட்டப்பட்டது.

அதன் பிறகு போக்குவரத்தும் துவங்கப்பட்டது. புதிய பாலம் கட்டப்பட்டு 5 ஆண்டுகளிலேயே  பெரிய பள்ளம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தொடர்ந்து  பள்ளம் சரி செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கப்பட்டது. இந்த சூழ்நிலையிலும் பழைய பாலம், அதே கம்பீரத்துடன் பிரமாண்டமாக  காட்சியளிக்கிறது. போக்குவரத்து இல்லாமல் இந்த பாலம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. ஆனாலும் பாலத்தின் தரம் குறையவில்லை. இதுகுறித்து நாட்டார்குளம் எஸ்.கே.திருப்பதி கூறியதாவது:  தாமிரபரணி ஆற்றில்  வல்லநாடு பக்கப்பட்டியில் கட்டப்பட்ட பழமையான பாலம் மட்டும்  மிக தரமாக  அப்படியே உள்ளது. இந்த பாலம் சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில்  கட்டப்பட்டது.

நமது முன்னோர்கள் கட்டிய பாலம்.  இந்த பாலத்தினை நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். மேலும் பாலத்தில் போக்குவரத்து இல்லாமல் இருந்தால்  பாலமே பாழடைந்துவிடும். எனவே நெல்லை சந்திப்புக்கு வல்லநாடு வழியாக செல்லும் டவுன் பஸ் அனைத்தையும் இந்த பாலம் வழியாக அனுப்பி பக்கபட்டியில் ஆள் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். வல்லநாடு ஆற்றுப்பாலத்தை பராமரிக்க உடனே மராமத்து பணிகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : riverbank , Vallanadu, River Memorial, Public
× RELATED கூவம் ஆற்றங்கரை வீடுகளை அகற்ற...