×

தக்கலை அருகே கூட்டமாவில் 6வது நாளாக முற்றுகை: பொதுமக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்

தக்கலை: தக்கலை அருகே  குழிக்கோட்டை அடுத்த கூட்டமாவில் டாஸ்மாக் கடைக்கு  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தக்கலை அருகே உள்ள முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட கூட்டமாவு ஆள்காட்டிகுளம் அருகில் கடந்த 3ம் தேதி திடீரென அரசு டாஸ்மாக் கடை செயல்படத் தொடங்கியது. இந்த கடை அம்மாண்டிவிளையில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட கடை என கூறப்பட்டது. இந்த கடையினால் தக்கலை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் மதுபான கடை 13 ஆக உயர்ந்தது. புதிதாக கடை திறக்கப்பட்ட தகவலறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சு நடத்தினர். பின்னர் கலெக்டரை சந்தித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். பொதுமக்கள் எதிர்ப்பால் கடை சில நேரம் திறப்பதும், மூடுவதுமாக காணப்பட்டது. இந்த கடை அமைக்கப்பட்டதால் கழிக்கோடு, பெரம்பி, சடையங்கால், மருதுார்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். மதுபான கடை அருகே வழிபாட்டு தலங்கள், குடியிருப்புகள் உள்ளன. மேலும் ஆபத்து நிறைந்த ஆள்காட்டிகுளம் உள்ளது. ஆதலால் கடையை நடத்தக்கூடாது என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 6வது நாளாக நேற்றும் ஏராளமான பெண்கள் அங்கு திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக பிரின்ஸ் எம்எல்ஏ, திமுக மாவட்ட துணை செயலாளர் ெஜயராணி ஜோஸ், ஒன்றிய செயலளார் ரமேஷ்பாபு, பேரூர் செயலாளர் எட்வின், முன்னாள் கவுன்சிலர் கனகபாய், வெள்ளிக்கோடு கூட்டுறவு சங்க தலைவர் கிறிஸ்துராஜ்,

மதிமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பள்ளியாடி குமார், பங்கு தந்தையர்கள் டோமினிக் கடாட்சதாஸ், சேகர் மைக்கேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் பேச்சு நடத்தினார். இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. மேலும் அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் கஞ்சி காய்ச்சினர். அப்போது அங்கு வந்த தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். அரசிடம் முறையிட்டு தீர்வு ஏற்படும் வரையிலும் மதுபான கடை திறக்கப்பட மாட்டாது என  உறுதி கூறினார். மேலும் அரசிடம் இது தொடர்பான முறையீடு செய்யுமாறு வலியுறுத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Siege ,Takalai ,protest ,shop , Tailor, siege, tasma shop, closure
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!