×

மிக உயரிய நிஷான் இஸ்ஸுதீன் விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார் மாலத்தீவு அதிபர் இப்ராகிம்

மாலே: வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘நிஷான் இஸ்ஸுதீன்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக நரேந்திரமோடி இருநாள் அரசு முறை பயணமாக இன்று மாலத்தீவு சென்றுள்ளார். அண்டைநாடுளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைப்படி, கடந்த முறை பூடான் சென்றிருந்த  பிரதமர் மோடி, தற்போது மாலத்தீவை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து இன்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு மாலே விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மாலத்தீவு அதிபர் இப்ராகிமை சந்தித்து இருதரப்பு உறவு மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  அப்போது பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. மாலத்தீவுக்காக கிரிக்கெட் அணி மற்றும் கிரிக்கெட்  மைதானத்தை உருவாக்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று மாலத்தீவு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாலத்தீவு  நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

இதற்கிடையே, மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித், ‘மாலத்தீவு அரசால் வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘நிஷான் இஸ்ஸுதீன்’ விருது வழங்கி கவுரவிக்க மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முஹம்மது சோலிஹ் தீர்மானித்துள்ளார்’ என  தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘நிஷான் இஸ்ஸுதீன்’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி மாலத்தீவு அதிபர் இப்ராகிம் கவுரவித்தார். தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்டு தந்த பேட்டை மாலத்தீவு அதிபர் இப்ராகிமிற்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.


Tags : Ibrahim ,India ,Maldives , Nishan Ishudheen Award, Prime Minister Modi, Maldives President Ebrahim
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...