×

திருவில்லிபுத்தூர் அருகே ‘செல்பி’ எடுத்தவர்களை விரட்டிய யானைகள்: வாகனங்களையும் விட்டு வைக்கவில்லை

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. இதன் அருகே உள்ள மாந்தோப்புகளில் கடந்த இரு தினங்களாக யானைகள் முகாமிட்டு வருகின்றன. காலை 6 மணிக்கு தோப்புகளில் நுழையும் யானைகள், மாங்காய்களை சாப்பிட்டுவிட்டு 8 மணிக்கு அடர்த்தியான வனப்பகுதிக்கு சென்றுவிடுகின்றன. மீண்டும் மாலை 5 மணிக்கு தோப்புகளுக்கு வந்து மாங்காய்களை பதம் பார்த்து விட்டு செல்கின்றன. செண்பகத்தோப்பு அடிவார பகுதியில் நேற்று மாம்பழம் மற்றும் பலாப்பழம் ஏற்றிக்கொண்டு விவசாயிகள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடிவாரத்தில் சுற்றிய ஒரு யானை ஜோடி வாகனங்களை விரட்டின. வாகனத்தில் இருந்தவர்கள் கூச்சல் போட்டும், ஹாரன் அடித்தும் வேகமாக சென்று விட்டனர்.

மேலும் அங்கு சுற்றிய யானைகளிடம் சிலர் ‘செல்பி’ எடுக்க சென்றனர். அவர்களை பார்த்த யானைகள் பலமாக பிளிறியவாறு விரட்ட தொடங்கின. இதனால் பயந்துபோன அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில மாதங்களுக்கு பிறகு தற்போது செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயில் பாதை செல்லும் முதல் பாலத்தின் அருகிலேயே ஒரு ஜோடி யானை முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் அந்த பகுதியில் வருபவர்களையும் செல்பி எடுக்க முயல்பவர்களையும் விரட்டுகிறது. மாங்காய் சீசன் என்பதால் யானைகள் தொடர்ந்து இங்கு முகாமிட வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அடிவார பகுதியில் யானைகள் முகாமிட்டு இருப்பதால் வனப்பகுதிக்கு யாரும் அனுமதியின்றி செல்ல வேண்டாம். கோயிலுக்குச் செல்ேவார் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.

Tags : Srivilliputhur , Srivilliputhur, 'Selby, casting elephants
× RELATED விருதுநகர் மாவட்டம்...