×

ராஜஸ்தான் மாநிலத்தில் போலீஸ் ஐஜி மீது பெண் பாலியல் புகார்

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி பி.எல்.மீனா என்பவர் மீது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். பி.எல்.மீனா, தற்போது ஜெய்பூரில் உள்ள மாநில தலைமையக போலீஸ் பயிற்சி மையத்தின் ஐஜியாக பணியாற்றி வருகிறார். பெண் கொடுத்த பாலியல் புகாரால், தற்போது ஒரு மாதம் விடுப்பு எடுத்து சென்றுவிட்டார். கடந்த ஜனவரி மாதம் பி.எல்.மீனாவை, ஒரு வழக்கு சம்பந்தமாக அந்த பெண் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஐஜி தவறாக நடக்க முயன்றதாகவும், தொடர்ந்து அவரை அடுத்தடுத்த நாட்களில் பின்தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கடந்த 3ம் தேதி வழக்கறிஞர்ஒருவருடன் சென்று, பிகானர் மாவட்ட போலீஸ் எஸ்பி பிரதீப் மோகனிடம், ஐஜி மீது புகார் அளித்தார். அதில், ‘பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் ஆகிய புகாரின் கீழ், ஐஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஐஜி தரப்பில் இருந்து, புகாரை வாபஸ் பெறக்கூறி மிரட்டல் வருகிறது’ என்று வலியுறுத்தி இருந்தார். பெண் ஒருவர், ஐஜி மீது புகார் அளித்துள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது.


Tags : IGI ,Rajasthan , Rajasthan, IG, Sexual Harassment, Jaipur
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை