×

காசிமேடு பகுதியில் குடிநீர் கோரி மக்கள் மறியல்

பெரம்பூர்: காசிமேடு பகுதியில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புதுவண்ணாரப்பேட்டை செழியன் நகர், அசோக் நகர், மார்க்கெட் பாரம் தெரு மற்றும் காசிமேடு சூரியநாராயணன் சாலை, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேற்கண்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படவில்லை, என கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்,  ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று காசிமேடு எண்ணூர் விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக இந்த பகுதிக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும், என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி பாதிப்பு ஏற்பட்டது.

Tags : area ,Kasimedu , Kasimedu, drinking water, stir
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...