×

ஓபிஎஸ் மகன் எம்பி அல்லது அமைச்சராக பதவியேற்க இடைக்கால தடை விதிக்க கோரி இரண்டொரு நாளில் வழக்கு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை: “ஓ.பி.எஸ். மகன் எம்பி அல்லது மத்திய அமைச்சராக பதவியேற்க இடைக்கால தடை விதிக்கக்கோரி இரண்டொரு நாளில் வழக்கு தொடரப்படும்” என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் முன்னாள்  தலைவரும், தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முன்னாள்  மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர். சந்திப்புக்கு பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி: தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் வெற்றியை எதிர்த்து  வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் மகன் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மத்திய அமைச்சராகவோ பதவி வகிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டொரு நாளில் நான் வழக்கு  தொடர உள்ளேன்.

நீட் தேர்வு முடிவுகள் வந்திருக்கின்றன. 38 சதவீதம், 40 சதவீதம் தேர்ச்சி என்று சொல்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் 2 மாணவிகள் இறந்திருக்கிறார்கள். இதற்காகத்தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலே ராகுல் காந்தி மிக  தெளிவாக சொல்லியிருந்தார். நீட் தேர்வு தமிழகம் போன்ற மாநிலங்களில் இருப்பதை நாங்கள் எடுத்து விடுவோம் என்றார். நீட் தேர்வு தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி சொன்னது. ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடி என்ன  செய்ய போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என்று சொன்னவருக்கு, மும்மொழி கொள்கை என்னவென்றே புரியாது. அவ்வளவு பெரிய அறிவாளிகள் இவர்கள்.

ஆகவே அவர் மாற்றி மாற்றி சொன்னது, டிவிட்டரில் போட்டது, உடனே அதை எடுத்தது என்று சொல்வது, என்னை பொறுத்தவரை இவர்கள் ஆளுவதற்கு தகுதியற்றவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட  ேவண்டியவர்களை எல்லாம் கைது செய்யாமல் காப்பாற்றியவர் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். சேகர் ரெட்டியை கைது செய்யாமல் காப்பாற்றியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. நாளை மந்திரிமார்களை எல்லாம்  கைது செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், இவர் பதவி நீட்டிப்பு இருந்தால் தாங்கள் கண்டிப்பாக தப்பித்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பதவி நீட்டிப்பு தரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : OPS ,ministers , Elangovan
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...