×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆய்வு நடத்திய விவகாரம்: அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் பணியிட மாற்றம்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்திய விவகாரம் தொடர்பாக வேலூர் மண்டல இணை ஆணையரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோயிலை  தனியார் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இக்கோயிலில் ஆய்வு நடத்த வேலூர் மண்டல இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டார். அதன் பெயரில் உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் கொண்ட குழு ஆய்வுக்கு சென்றது. அப்போது  கோயிலில் இருந்தவர்களுக்கும் ஆய்வு செய்த வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக எதன் அடிப்படையில் ஆய்வு செய்ய வந்தீர்கள் என்று கோயிலில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர். உதவி ஆணையர் தரப்பில் இணை  ஆணையர் உத்தரவு நகல் இருப்பதால்தான் ஆய்வுக்கு வந்தோம் என்று தெரிவித்தனர். ஆனால் கோயிலில் இருந்தவர்கள் அவர்களை ஆய்வு செய்ய விடமால் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உதவி ஆணையர் தலைமையிலான  குழு திரும்பி சென்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரவே ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிைடயில் தங்களை பணி செய்ய விடாமல் கோயிலில் இருந்தவர்கள்  தடுத்ததாக உதவி ஆணையர் ரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கமிஷனர் பனிந்திர ரெட்டிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இணை ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது எந்த புகார் அடிப்படையில் ஆய்வுக்கு உத்தரவு  அளிக்கப்பட்டது என்பது தொடர்பாக இணை ஆணையர் தரப்பில் முறையாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வேலூர் மண்டல இணை ஆணையர் தனபாலை சிவகங்கை மண்டல இணை ஆணையராக பணியிட  மாற்றம் செய்து அறநிலையத்துறை செயலாளர் அபூர்வ வர்மா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது: பொது நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறையில் வேலூர் இணை  ஆணையராக பணிபுரிந்து வரும் தனபால் பணியிட மாறுதலில் சிவகங்கை மண்டல இணை ஆணையராக நியமனம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மண்டல இணை  ஆணையர் செந்தில் வேலனிடம் வேலூர் மண்டல இணை ஆணையர் பொறுப்பை கூடுதலாக ஒப்படைத்து கமிஷனர் பனிந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Mullamaravatur Adiarapasakthi ,Regional District Commissioner ,Vallore , Melmaruvathur, Charity department
× RELATED வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்...