×

புறா பிடிக்க சென்ற ஆசையால் விபரீதம்: 120 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவர்கள் 3 பேர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்பு

சேலம்: புறா பிடிக்க சென்ற ஆசையால் கிணற்றில் விழுந்த தத்தளித்த சிறுவர்கள் 3 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த அண்ணாநகரை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன்கள் ஹரி (14), கவுதம் (12). இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். நேற்று மாலை, அங்குள்ள பூமலை கரடு பகுதிக்கு புறா பிடிக்க இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷூம் (14) சென்றுள்ளான். பூமலை கரட்டில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 120 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த புறாவை பிடிக்க முயன்றுள்ளனர். முதலில் ஹரி, மோட்டார் இறக்க கட்டப்படிருந்த கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக, கயிறு அறுந்து உள்ளே விழுந்தான். கிணற்றில் சுமார் ஒரு அடிக்கு தண்ணீர் இருந்ததால், பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை.

ஆனாலும், உள்ளே இருந்து சிறுவன் ஹரி கதறியழுதான். இதனால் அதிர்ச்சியடைந்த, கவுதம், சுரேஷ் ஆகியோர் ஹரியை காப்பாற்ற பைப் ஒன்றை பிடித்து கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர், மூவரும் பைப்பை பிடித்து மேலே வர முயன்றனர். ஆனால், ஒருவராலும் மேலே ஏற முடியாததால் கூச்சலிட்டுள்ளனர். அவர்களது சத்தம் கேட்டு அங்கு பூ பறித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் 3 சிறுவர்கள் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, பனமரத்துப்பட்டி போலீசாரும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணிநேரம் போராடி சிறுவர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.

Tags : struggle , Pigeon, 120 feet, boys, recovery
× RELATED மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க...