×

சிறிய மழைக்கே தத்தளிக்கும் அரிமளம் வாரச்சந்தை

*அடிப்படை வசதியின்றியும் வியாபாரிகள் கடும் அவதி

திருமயம் : சிறிதளவு மழைக்கே நீரில் தத்தளிக்கும் அரிமளம் வார சந்தையால் வியாபாரிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், விற்பனை கூடம் கட்டிதர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமையான, பாரம்பரியமிக்க வார சந்தைகளில் அரிமளம் வாரசந்தையும் ஒன்று. இங்கு வாரம்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் சந்தையில் அரிமளம், ஓணாங்குடி, சீகம்பட்டி, சத்திரம், மிரட்டுநிலை, கீழபனையூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

மேலும் அரிமளம் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை விற்பதற்கு விற்பனை தளமாகவும் அரிமளம் வார சந்தையை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு அரிமளம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மட்டுமல்லாது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், மீன்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருகின்றனர். அனைத்து பொருட்களும் ஒருசேர கிடைப்பதால் அப்பகுதி மக்களின் ஆதவரோடு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக சந்தை இயங்கி வருகிறது.

இந்நிலையில் பல ஆண்டுகளாக வாரசந்தை இயங்கி வந்தாலும் எந்த ஒரு அடிப்படை வசதி, முன்னேற்றமும் இல்லாமல் சந்தை செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள், வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் சந்தை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7.30 வரை மணி நடைபெறுகிறது. அரிமளம் பகுதி சுற்றி விவசாய கிராமங்கள் அதிகம் உள்ளதால் விவசாய பணிகளை முடித்துவிட்டு சந்தைக்கு வரும் விவசாயிகள், கூலி வேலைக்கு சென்று திரும்பும் மக்கள் 5 மணிக்கு மேல் தான் பொருட்கள் வாங்க சந்தைக்கு வருகின்றனர்.

இதனால் இரவு நேரம் வெளிச்சம் இல்லாமல் பொதுமக்கள் பொருட்கள் வாங்க, வியாபாரிகள் விற்பனை செய்ய போதுமான வெளிச்சம் இல்லாததால் ஒரு சில வியாபாரிகள் பேட்டரி விளக்கு மூலம் வியாபாரம் செய்கின்றனர். ஏழ்மையான வியாபாரிகள் வெளிச்சம் இல்லாமல் கொண்டுவந்த பொருட்களை விற்க முடியாமல் திரும்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனிடையே ஒரு சிலர் மொபைல் விளக்கு மூலம் வியாபாரம் செய்யும் அவலம் அரங்கேறுகிறது. மேலும் அதிகளவு பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்லும் சந்தையில் பொதுகழிப்பிட வசதி இல்லாததால் இயற்கை உபாதைகளை கழிக்க மறைவிடங்களை தேடி அலைய வேண்டி உள்ளது. இதனால் சுற்று சூழல் மாசுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் விற்பனை கூடங்கள் இல்லாததால் தரையில் தார்பாய் விரித்து காய்கறிககள், மற்ற பொருட்களை வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் சந்தை பகுதியில் நீர் தேங்கி காய்கறிகள் சகதியில் புரலும் நிலை ஏற்படுகிறது. அப்போது சுகாதாரமற்ற முறையில் காய்கறிகள் விற்கப்படுவதால் காய்கறி வாங்கி செல்லும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரம்பாரியமிக்க அரிமளம் வார சந்தையை மேம்படுத்தும் வகையில் மின்விளக்குகளுடன் கூடிய விற்பனை கூடம் அமைத்து, பொதுகழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : warrior ,Arimalam , rain,Arimalam ,weekly market , basic facility
× RELATED நெல்லை, புதுக்கோட்டையில் மிதமான மழை