×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

* கோயில் நிர்வாகம் எதிர்ப்பு
* அதிகாரிகள் போலீசில் புகார்

சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்கி கோயிலில், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் திடீர் என ஆய்வு நடத்த நேற்று முயன்றனர். அதற்கு கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக விளங்கி வருவது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம். இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து சாமி தரிசனம் பெற்று செல்வது வழக்கம்.  

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் வேலூர் இணை ஆணையர் தனபால் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரமணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் இருவர், செயல் அலுவலர் ஒருவர் என நான்கு பேர் கொண்ட குழுவினர் நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு வந்தனர்.

அந்த குழுவினர், வேலூர் இணை ஆணையர் வழங்கிய கடிதம் ஒன்றை ஆலய நிர்வாகிகளிடம் கொடுக்க வந்திருந்தனர். ஆனால், அதனை யாரும் பெற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், நான்கு பேர் கொண்ட குழுவினர் கோயிலின் சொத்து பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பார்க்க, தங்களை அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அதற்கு, அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்யவிடாமல் தடுத்தனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் உதவி ஆணையர் ரமணி, மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து உதவி ஆணையர் ரமணி கூறுகையில், ‘நாங்கள் காலை 9.30 மணி அளவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்றிருந்தோம். ஆனால், எங்களை நீண்ட நேரம் காக்க வைத்தனர். அது மட்டுமின்றி ஒரு சிலர் எங்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம்’ என்றார்.

Tags : Adimarasakthi Temple , Perumalathur, Adiparasakthi Temple, Charity Authorities, Research
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...