புதுடெல்லி: சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை இதுவரை 85 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தி இருக்கிறது. நேற்று அவர் 14வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கினார். இதில், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக வதேரா, அவருடைய உதவியாளர் மனோஜ் அரோரா மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதனிடையே, சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க கோரி வதேரா தாக்கல் செய்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 6 வாரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பி வரும் சம்மன்களை ஏற்று, டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் விசாரணைக்காக வதேரா ஆஜராகி வருகிறார். கடந்த வியாழன்று ஆஜரான அவரிடம், 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் வதேரா வெளியிட்ட பதிவில், ‘13வது முறையாக விசாரணைக்கு ஆஜரானேன். இதுவரை 80 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிப்பதற்காக கடைசி வரை போராடுவேன்,’ என்று கூறியுள்ளார். இதனிடையே, உடல்நிலை காரணமாக 31ம் தேதி விசாரணைக்கு அவர் ஆஜராக வில்லை. நேற்று காலை மீண்டும் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் ஆஜரானார். அவரது வாக்கு மூலம், 5 மணிநேரம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.