×

நள்ளிரவுகளில் தொடரும் சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அச்சம் பைக் ரேசில் ஈடுபட்ட 20 பேர் அதிரடி கைது

* 175 பேரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரை  
* 22 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: மெரினாவில் தொடர் பைக் ரேசில் ஈடுபட்ட 20 பேரை அதிரடியாக போக்குவரத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து22 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட175 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் ஆர்டிஓவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். போலீசார் பைக் ரேசில் ஈடுபட்ட நபர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அதிக எண்ணிக்கையில் வாலிபர்கள் இருந்ததால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் பின் வாங்கினர்.

அதைதொடர்ந்து பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் மெரினா காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளில் ஆரவாரத்துடன் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மெரினாவுக்கு அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட வந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் அன்று அதிகாலை சென்னை பட்டாளத்தை சேர்ந்த சாந்தகுமார்(19) மற்றும் பாலாஜி உட்பட 8 பேர் மெரினா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மெரினா சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே மாநகர பேருந்து மீது பைக் மோதி சாந்தகுமார் என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மெரினா கடற்கரை பகுதிகளில் பைக் ரேசில் ஈடுபடும் வாலிபர்களை கட்டுப்படுத்த போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவுப்படி காமராஜர் சாலையில் கடந்த ஞாயிற்று கிழமை இரவு நேரங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் உட்பட 130க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், பைக் ரேசில் ஈடுபட்ட 80 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 22 பேர் மீதும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்ததாக 10 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 130 வழக்குகளும் என மொத்தம் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 7 கார்கள், 16 பைக்குகள், ஒரு ஆட்டோ என மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த அதிரடி சோதனை நேற்று முன்தினம் இரவும் நடைபெற்றது. அப்போது போலீசாரின் தடையை மீறி 30க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பைக்குகளில் அதிக ஒலி எழுப்பியபடி காமராஜர் சாலையில் பறந்தனர். அப்போது சோதனையில் ஈடுபட்ட போலீசார் பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை தங்களது வாகனங்களில் பின் தொடர்ந்து சென்று 30க்கும் மேற்பட்டோரை சுற்றி வளைத்து மடக்கினர்.

மெரினா சாலையில் தொடர் பைக் ரேசில் ஈடுபட்ட 20 பேர் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியது, சாலை விதிகளை மீறியது, அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறியது ஆகிய பிரிவுகளின் கீழ் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து22 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட வாலிபர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இதேபோல் சென்னையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து பைக் ரேசில் யாரேனும் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும், வெளிநாடு செல்ல காவல் துறை சார்பில் தடையில்லா சான்று வழங்கப்படாது என்று கடுமையாக எச்சரித்துள்ளனர்.


Tags : men , Midnight, following incident, motorists, fear, bike race
× RELATED குன்னூர் அருகே தேயிலை எஸ்டேட்டின் இரும்பு கேட் திருடிய இருவர் கைது