×

போலீஸ்- உணவு சப்ளை மேலாளர் ‘வாட்ஸ் அப்’ குழு தொடக்கம் சாலைவிதி மீறும் ஆன்லைன் உணவு சப்ளை ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில் முடிவு

சென்னை: சென்னையில் சாலை விதிகளை மீறும் ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் அடங்கிய புதிய வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்களான ஸ்விகி, சூமோடோ, உபர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்களின் மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர் மற்றும் போக்குவரத்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2 மணி நேரம் நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது, நிறுவனங்கள் சார்பில் தங்களுடைய ஊழியர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள் வழங்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நிறுவனங்கள் தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்களை பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.

பின்னர் கூட்டத்தில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் செயலி வழி உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களின் மேலாளர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும், அதில் விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்கள் புகைப்படங்களை காவல் துறை அதிகாரிகள் பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அந்த ஊழியர் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்ய வேண்டும் எனவும் முடிவு செசய்யப்பட்டது. அதன்படி, நேற்று மாலை ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டது.

Tags : Police-Food Supply Manager ,Arun Leader , Police - Food Supply, Manager 'Vats Up' from the Group, Road Rules, Online Food Supply, Employees, Strike
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...