×

திருவண்ணாமலை தனியார் வங்கியில் ரூ.1.50 கோடி மதிப்பிலான அடமான நகைகள் மாயம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதி தெருவில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பல தரப்பினரும் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். பலர் தங்கள் நகைகளையும் அடமானம் வைத்துள்ளனர். வங்கியில் மாதத்திற்கு இருமுறை அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்நிலையில், கடந்த வாரம் அடகு வைத்த நகையை மீட்க ஒருவர் வந்தபோது, அவரது நகை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தொடர்ந்து மற்ற நகைகள் குறித்தும் ஆய்வு செய்தபோது ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது தெரியவந்துள்ளது. 42 வாடிக்கையாளர்களின் நகைகளான அவை சுமார் 750 கிராம் எடை கொண்டதாக இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருண்ணாமலை மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்தியிடம் வங்கி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக வங்கி மேலாளர் சுரேஷ், நகை மதிப்பீட்டாளர்களான கார்த்தி, மணி உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் ராகசியமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து அறிந்த வங்கி நிறுவனம், அங்கு பணிபுரிந்த பல்வேறு நபர்களை மாற்றம் செய்துள்ளதாகவும், திருட்டு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து பேசிய காவல்துறையினா், நிதி நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் இந்த செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா? நகைகளை அடமானம் வைக்காமல் வைத்தது போல் கணக்கு காட்டி உள்ளார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரகசிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நகைகள் மாயம் குறித்த செய்தி மெல்ல கசிய தொடங்கியதை அடுத்து அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் வங்கிக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.


Tags : bank ,Tiruvannamalai ,customers , Tiruvannamalai, private bank, mortgage, jewelery, KVB
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...