×

எங்க ஊர்ல எதுவுமே சரியில்லை... பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மக்கள் புலம்பல்

திண்டுக்கல் : பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சுகாதாரக்கேடு, பிளாஸ்டிக் பயன்பாடு, செயல்படாத தண்ணீர் தொட்டிகள், பூட்டி கிடக்கும் கழிப்பறை உள்ளிட்டவையால் பல இன்னல்களை சந்தித்து வருவதாக மக்கள் புலம்புகின்றனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மாலைப்பட்டி, அழகம்பட்டி, வெல்லம்பட்டிபுதூர், வரதராஜபுரம் காலனி, பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம், சௌந்தராஜா ஏர்போர்ட் நகர், என்.ஜி.ஓ.காலனி, காட்டுமடம், உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 25க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.

பேரூராட்சிக்கு இணையான மக்கள் தொகையும், கட்டிடங்களும் வருமானமும் உள்ள இந்த ஊராட்சியில் பொது சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை என பொதுமக்கள் குறை கூறுகின்றனர். குறிப்பாக ஊராட்சி முழுவதும் உள்ள கிராமங்களில் வைக்க வேண்டிய குப்பை தொட்டிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காட்சிப்பொருளாய் உள்ளன. வரதராஜபுரம் காலனியில் குப்பை தொட்டியை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதில் மனித கழிவுகளும் இருப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுதவிர ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள காளியம்மன் கோயில் பகுதியில் 2 ஆண்டுகளாக சிறு மின்விசை தண்ணீர் தொட்டி செயல்படவில்லை.

alignment=


இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் கழற்றி வைத்த மோட்டாரை காணவில்லை என்று கூறுவதாக புலம்புகின்றனர். இதுபோல வெல்லம்பட்டி புதூர், மாலைப்பட்டியில் அங்கன்வாடி, மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் பயன்பாடின்றி காட்சி பொருளாய் உள்ளன. மாலைப்பட்டியில் 2017-18 வருட பொதுநிதியில் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நோய்கள் பரவி வருகின்றன.

alignment=


அருகில் உள்ள திறந்தவெளி கிணற்றில் 2018-19 ஒன்றிய பொதுநிதியில் ரூ.2 லட்சத்து 80ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர்.  கிணறு திறந்தவெளியாக இருப்பதால் குப்பை கழிவுகள் விழுகிறது. இதற்கு இரும்பு மூடி போட பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை இதுகுறித்து பசுமை பாதுகாப்பாளர்கள் கூறுகையில், ‘ஒரு ஊரின் நலமே சுகாதாரத்தில்தான் இருக்கிறது. ஆனால் இந்த ஊராட்சி நிர்வாகம் அதனை பற்றி கவலைப்படுவதே இல்லை. பிளாஸ்டிக் தடை விதித்து சில வாரங்கள் மட்டும் ஆய்வுக்கு வந்தனர். அதன்பின் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை.

இதனால் ஊராட்சி முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து குவிந்து கிடக்கின்றன. தொட்டிகளை ஊரில் வைக்காமல் ஊராட்சி அலுவலகம் அருகே வைத்துள்ளனர். இதனால் குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள தண்ணீர் தொட்டிகளில் பராமரிப்பு பணி என மோட்டாரை கழற்றி சென்றனர். அதன்பின் அது திரும்பி வரவே இல்லை.  மாலைப்பட்டியில் பூட்டி வைத்திருக்கவே கழிப்பறை கட்டி வைத்துள்ளனர். இதனால் திறந்தவெளி கழிப்பிடம் தொடர்கதையாக உள்ளது. அங்குள்ள திறந்தவெளி கிணற்றிற்கு மூடி போட பலமுறை சொல்லியும் நடவடிக்கை இல்லை. எனவே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகம் மக்களின் நலன் கருதி சுகாதாரத்திற்கு தடையாக இருக்கும் பிரச்னைகளை உடனே களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Balakrishnapuram , Dindigul,Basic facilities ,Balakrishnapuram Village, people suffer
× RELATED திண்டுக்கல்லில் தேர்தல் விதிமீறி சின்னம் வரைந்த 5 பேர் மீது வழக்கு