×

தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சிக்னல் பழுதால் போக்குவரத்து பாதிப்பு: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. சேலையூர், கேம்ப் ரோடு, திருவஞ்சேரி, மப்பேடு, அகரம் தென், மாடம்பாக்கம்,  சந்தோஷபுரம், வேங்கைவாசல், மேடவாக்கம், வேளச்சேரி,  சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.அதுமட்டுமின்றி, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் என தினமும்  ஆயிரக்கணக்கானோர் இவ்வழியே சென்று வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த இச்சாலையில்  தாம்பரம்  மேம்பாலம் தொடங்கி சந்தோஷபுரம் சிக்னல் வரை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள  சிக்னல்கள் பழுதடைந்துள்ளன.இவ்வழியே காலை, மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசாரும் பணியில் ஈடுபடாததால், விபத்துகள் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் ஆங்காங்கே உள்ள சிக்னல்கள் பழுதடைந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.சேலையூர் காவல் நிலையம் தொடங்கி கேம்ப் ரோடு சிக்னல் வரை சாலை குறுகியுள்ளதால், கடந்த சில மாதங்களாக விபத்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல், காமராஜபுரம் சிக்னல், கவுரிவாக்கம் சிக்னல், சேலையூர் காவல் நிலையம் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை  விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முக்கிய பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்க வேண்டிய போக்குவரத்து போலீசார், ஆங்காங்கே வாகனங்களை மறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள், இந்த சாலையில் பழுதடைந்துள்ள  சிக்னல்களை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

சிசிடிவி கேமரா இல்லை
சென்னையின் முக்கிய சாலைகள் உள்பட பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்தை சீரமைக்கவும், குற்றச் சம்பவங்களை தடுக்கவும் போலீசார் சார்பில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், முக்கியத்துவம்  வாய்ந்த தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இரவு நேரங்களில்  மின்விளக்குகளும் எரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Travancore ,Velachery ,motorists , Tambaram - Velalchery road, Traffic,Accidental motorists
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...