×

கலெக்டர் அலுவலகம் முன் குடங்களுடன் பெண்கள் மறியல் தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமத்துக்கே குடிநீர் சப்ளை இல்லை

நெல்லை: தாமிரபரணி நதிக்கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கிராமத்திற்கே முறையாக குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லை அருகே குன்னத்தூர் ஊராட்சி தாமிரபரணி ஆற்றங் கரையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு சுமார் 2,500 பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் நேற்று திரண்டனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக வலியுறுத்தினர்.
 
பின்னர் குன்னத்தூர் ஊர் மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
குன்னத்தூர் ஊராட்சியில் 6 வார்டுகளுக்கும் 8 வாட்டர் டேங்குகள் இருந்தும் தண்ணீர் சப்ளை சரிவர கிடைப்பதில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை வரும் தண்ணீரும், குறைந்த நேரத்திலேயே நின்று விடுகிறது. விரைவில் இப்பிரச்னையை தீர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர்: திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 12 நாட்களாக சீராக குடிநீர் வரவில்லை. தரைமட்ட தொட்டியிலிருந்து மேல்நிலைத்தொட்டிக்கு தண்ணீரை கொண்டு செல்ல, மின்மோட்டார் அங்கு இல்லை. குடிக்க தண்ணீர் கிடைக்காததால், கிராம மக்கள் லாரி தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் நேற்றுஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பெண்கள் காலிக்குடங்களுடன் ஆவேசமாக திரண்டு வந்தனர். திருப்பூர் ரோட்டில் ஊராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும், போலீசாரும் ஊராட்சி செயலர் மகேசும் பெண்களிடம் 2 நாட்களில் வீட்டு இணைப்புகளுக்கு சுழற்சி முறையில் சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை லாரி மூலம் அனைவருக்கும் குடிநீர் வழங்குவதாகவும் உறுதியளித்தனர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நரிக்குடி ஊராட்சி முட்டக்குடி கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை.  இந்நிலையில் குடிநீர் விநியோகம் செய்யகோரி திருப்பனந்தாள்- ஆடுதுறை சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பனந்தாள் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் மறியலை பொதுமக்கள் வாபஸ் பெற்றனர்.

Tags : women ,office ,village ,Collector ,Tamaraparani , Collector Office, Tamaraparani
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...