×

தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட கல் குவாரிகளில் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை திட்டம்: சுரங்கத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: கைவிடப்பட்ட கல் குவாரிகளை குடிநீர் தேக்கி வைக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுரங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. புவியியல் மற்றும் சுரங்கத்துறை விதிகளின்படி, குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்கக்கூடாது. அதன்படி, குறிப்பிட்ட யூனிட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ள குவாரிகள் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான குவாரிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. ஆனால், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கல்குவாரிகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால், குப்பைகொட்டப்படுவதால் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே, கைவிடப்பட்டவற்றில் குறிப்பிட்ட குவாரிகளை குடிநீர் தேவை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கல்குவாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர். வேலூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ரமேஷ் கூறுகையில், ‘கைவிடப்பட்ட கல் குவாரிகளை குடிநீர், திடக்கழிவு மேலாண்மைக்காக பயன்படுத்த முடியும். இதற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்’ என்றார்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘கைவிடப்பட்ட கல்குவாரிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு அனுமதி அவசியம். அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசடையும். எனவே, சம்பந்தப்பட்ட குவாரியின் தன்மையை பொறுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும். சுற்றுச்சூழல் மாசடையும் வகையில் கல்குவாரிகளில் குப்பைகள் கொட்டப்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Tags : Mining officials ,Tamil Nadu , Tamil Nadu, Abandoned, Stone Quarry, Drinking Water Management Project, Mining
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...