×

தேர்தல் தோல்வி, எம்எல்ஏக்கள் போர்க்கொடி எதிரொலி எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை

சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி, திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வது, உள்ளாட்சி தேர்தல், எம்எல்ஏக்கள் போர்க்கொடி, தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாத கூட்டணி உள்ளிட்ட பிரச்னையால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து நேற்று திடீரென ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ஆட்சியை கவிழ்க்க இடம் கொடுக்கவிடாமல், காப்பாற்ற அனைவரும் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கடந்த மாதம் சந்தித்தது. இந்த தேர்தலில் கணிசமான அளவில் வெற்றியை பெற்று கட்சியில் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கருதினார். இதனால் வேட்பாளர் தேர்வு, கூட்டணிக்கு தொகுதிகளை முடிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளில் ஓ.பன்னீர்செல்வத்தை விட தனது பேச்சை அனைவரும் கேட்கும்படி
செய்தார். இதனால் தேர்தல் நேரத்தில் அதிமுகவில் அவரது கைதான் ஓங்கியிருந்தது.

ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 37 தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்தோற்றது. ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம் கை அதிமுகவில் ஓங்கியுள்ளது. மேலும் கூட்டணி அமைக்கும்போதே பாஜக, பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதை தொண்டர்கள் ஏற்கவில்லை. பாமகவுடன் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டாலும், இரண்டு கட்சி தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் இருந்ததால், இரு கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றியை ஈட்ட முடியவில்லை. ஏன் படுதோல்வியை கூட தவிர்க்க முடியவில்லை. பல லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய நேர்த்தது.

இதனால் பாமக, பாஜக, தேமுதிகவுடன் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணியை அதிமுக தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதோடு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் ஏன் ஓட்டுக்கள் இல்லாத கட்சிகளுக்கு இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். உள்ளாட்சிகளில் நம் தொண்டர்களுக்கு அவர்கள் தலைவர்களாக இருக்க வேண்டுமா என்றும் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 2 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் கூட்டணியில் இருந்து பாஜக, பாமக, தேமுதிகவை கழட்டி விட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், மத்திய பாஜ அமைச்சரவையில் அனைத்து கூட்டணிகளுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்க, மோடி முடிவு செய்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, வைத்திலிங்கத்துக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று எடப்பாடி பாஜ தலைமையிடம் உறுதியாக கூறிவிட்டாராம். இதனால், கடைசி நேரத்தில் ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி கைநழுவி போனது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை ஓபிஎஸ் பகிரங்கமாக வெளிகாட்டாவிட்டாலும், நேரம் வரும்போது பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.

அதேநேரத்தில் டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி அடுத்த நாளே சென்னை திரும்பி விட்டார். இரண்டு நாட்கள் டெல்லியில் முகாமிட்டு பாஜவின் தேசிய தலைவர்களை சந்தித்த பிறகுதான் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்சை சந்திக்காமல் இருந்து வந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி 2 முறைதான் கோட்டைக்கு சென்றார். முன்பு தினமும் வருகிறவர், தற்போது தினமும் வருவதை நிறுத்தி விட்டார். தனது வீட்டிலேயே முடங்கிவிட்டார். மேலும் தேர்தல் தோல்வி குறித்து அனைத்து கட்சிகளும் குழு அமைத்து ஆராய்ந்து வருகிறது. ஆனால் அதிமுக மட்டும் குழு அமைக்கவில்ைல. ஆராயவும் இல்லை. தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என யாரும் கட்சியின் தலைமை அலுவலகம் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை. இதனால் தொண்டர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். மேலும், பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் 3 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி வீட்டிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 9 மணிக்கு வந்தார். இதைத்தொடர்ந்து மூத்த அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகளும் முதல்வர் வீட்டுக்கு வந்தனர். தொடர்ந்து அமைச்சர்களும் தங்கள் மாவட்ட அதிமுக எம்எல்ஏக்களுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் 1 மணி வரை நடைபெற்றது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், அதே நேரம் அதிமுகவின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறாமல், முதல்வர் வீட்டில் நடைபெற்றது அதிமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நடத்திய ஆலோசனை கூட்டம் குறித்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்கவை பொதுத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. எம்எல்ஏக்களுக்கான இடைத்தேர்தலில் மட்டும் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கி 20 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் முதல்வர் கருத்து கேட்டார். அனைத்து அமைச்சர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளில் கூட பல லட்சம் வாக்குகள் குறைந்துள்ளது. இது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே நேரம் அதிமுக கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதன்மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது. தமிழக பாஜ தலைவர்கள் அதிமுக அரசை கடந்த 2 ஆண்டகளாக குறைகூறி வந்தனர். அதேபோன்று, பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா என அனைவரும் அதிமுக கட்சியை குறை கூறியே தங்கள் கட்சியை வளர்த்து வந்தனர்.
 
இப்படிப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து, எப்படி வெற்றிபெற முடியும் என்று எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்தனர். அதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து நின்று நம் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்து, சபாநாயகர் தனபால் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ளனர். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இது வாக்கெடுப்புக்கு வரும். அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் உள்கட்சி பிரச்னைகளை மனதில் வைக்காமல், ஒற்றுமையாக இருந்து திமுகவின் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்று கட்சி தலைமை கோரிக்கை வைத்துள்ளது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கட்சி தலைமை தான் இனிமுடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

Tags : battlefield ,OPS , Electoral defeat, MLA, Eduardi, OBS
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...