×

திருவாரூர்- காரைக்குடி இடையே ரயில் தொடர்ந்து இயக்கப்படுமா?

* பயணிகள் சந்தேகம்

திருவாரூர் : திருவாரூர்- காரைக்குடி பாதையில் புதிய ரயில் சேவை துவங்கப்பட்ட முதல் நாளிலேயே வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் கண்ணில் ரயில்வே நிர்வாகம் மண்ணை தூவியதால் ரயில் சேவை தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் பயணிகளிடையே ஏற்ப்பட்டுள்ளது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை பணிகள் துவங்கின. இருப்பினும் ஆமை வேகத்தை விட மிகவும் குறைவாக நத்தை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்களும், சேவை சங்கத்தினரும், அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து  இந்த பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 28ம் தேதி இந்த ரயில் பாதையில் சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்த நிலையில் நாடாளுமன்ற  தேர்தலை காரணம் காட்டி இந்த ரயில் சேவை துவங்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து ரயில் உபயோகிப்பாளர் சங்கம் உட்பட பலரும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மீண்டும்  அளித்த நிலையில் நேற்று முன்தினம் (1ம் தேதி)  முதல் டெமு ரயில் சேவையினை தென்னக ரயில்வே துவக்கியுள்ளது. அதன்படி திருவாரூரிலிருந்து காலை 8.15 மணியளவில் புறப்பட்ட இந்த  ரயிலை நாகை எம்பி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனையடுத்து திருவாரூரிலிருந்து புறப்பட்ட ரயில் தொடர்ந்து மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக மதியம் 2.15 மணியளவில் காரைக்குடியை சென்றடைய வேண்டிய நிலையில் இரவு 8 மணியளவில் சென்றடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இதே வழித்தடத்தில் இரவு 8.30  மணிக்கு மீண்டும் திருவாரூர் வர வேண்டிய ரயில் வராததன் காரணமாக பயணிகள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகினர்.

வழிநெடுக வரவேற்பு காரணமாக தாமதம்?

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான 110 கிலோ மீட்டர் தூரத்தில் மொத்தம் 72 ரயில்வே கேட்டுகள் இருந்து வரும் நிலையில் இந்த ரயில்வே கேட்டுகள் அனைத்திலும் கேட் கீப்பர் இல்லை. இதனால் ரயில் மொபைல் கேட் கீப்பர்களை கொண்டு  இயக்கப்படுகிறது. அதன்படி இதே ரயிலில் இன்ஜினுக்கு அடுத்தபடியாக இருக்கும் முதல் பெட்டியில் ஒரு கேட் கீப்பரும்,  கடைசிப் பெட்டியில் ஒரு கேட் கீப்பரும் பணியில் ஈடுபடுகின்றனர். அதன்படி வழியில் ரயில்வே கேட் முன்னதாக இந்த ரயில் நிறுத்தப்பட்டு முதல் பெட்டியில் உள்ள கேட் கீப்பர் கேட்டை மூடி விட்டு அதே பெட்டியில் ஏறிவிடுவார்.

பின்னர் அந்த கேட்டை ரயில் கடந்த பின்னர் நிறுத்தப்பட்டு கடைசி பெட்டியில் இருக்கும் கேட் கீப்பர் கேட்டை திறந்து விட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறி கொள்வார். இதேபோல் ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் ரயில் நிறுத்தப்பட்டு கேட் மூடப்படுவதும் பின்னர் திறக்கப்படுவதும் காரணமாக 110 கிலோ மீட்டர் தூரத்தினை 6 மணி நேரத்தில் கடக்க வேண்டிய நிலையில் பயணிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருவாரூரில் காலை 8.15 மணிக்கு புறப்பட்ட ரயில் இரவு 8 மணி அளவில் 12 மணி நேர பயணமாக காரைக்குடி சென்ற நிலையில் முதல் நாள் என்பதால் அனைத்து ரயில் நிலையங்களிலும் பொது மக்களின் வரவேற்பு காரணமாக தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karaikudi ,Tiruvarur , thiruvarur,karaikudi ,Passenger train,service
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க