×

இலவச பஸ் பாஸ் கிடைக்கும் வரை மாணவர்கள் சீருடையில் பயணிக்கலாம்: போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை சீருடை அணிந்து கொண்டு  அரசு பஸ்களில் கட்டணமில்லாமல் மாணவர்கள் பயணிக்கலாம் என  போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களை பயன்படுத்தி பள்ளி, கல்லூரிக்கு  செல்வோருக்கு அரசு இலவச பஸ் பாஸ்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஆகஸ்ட் காலக்கட்டத்திற்குள் பாஸ் கொடுக்கப்பட்டு  விடும்.ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனை பெறுகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இலவச பாஸ் வழங்கப்படவில்லை.  இதனால் பஸ்களில் பயணிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு வழித்தடங்களில் கண்டக்டர்கள், மாணவர்களை கீழே இறக்கி  விடும் நிலை ஏற்பட்டது.

இதற்கு போக்குவரத்துக்கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறியே காலம் கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடிக்கடி மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து சம்மந்தப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பிறகு அதிகாரிகள் சீருடையில் பயணிக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து  இறக்கக்கூடாது என உத்தரவிட்டனர். அதன்பிறகு பிரச்னை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இவ்வாண்டு கோடை  விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கவுள்ளது.
எனவே மாணவர்களுக்கு இம்முறை எவ்விதமான சிக்கலும் இல்லாமல் பஸ் பாஸ்களை வழங்க வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.  தற்போது அதற்கான பணியில் வேகம் காட்டி வருகின்றனர். ₹1.90 கோடி செலவில் ஸ்மார்ட் வடிவிலான பாஸ்களை தயாரிக்க அவர்கள்  திட்டமிட்டுள்ளனர். அதை முழுவதுமாக தயாரித்து விநியோகம் செய்யும் வரை சீருடை அணிந்து கொண்டு இலவசமாக பயணிக்கலாம் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Until free, bus pass,uniform, Traffic Department ,Information
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...