×

சாலை விபத்தில் இறந்ததாக கருதப்படும் இசையமைப்பாளர், மகள் சாவில் மர்மம்: கேரள போலீஸ் மீண்டும் விசாரணை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே பிரபல வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான பால பாஸ்கர், அவரது 2 வயது மகள் சாலை விபத்தில் பலியானது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பால பாஸ்கர் (40). உலக புகழ்பெற்ற வயலின் கலைஞர். சில மலையாள திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் சென்று வயலின் இசைக் கச்சேரிகளை நடந்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகள் தேஜஸ்வினி (2).

கடந்தாண்டு செப்டம்பர் 24ம் தேதி பால பாஸ்கர், மனைவி, மகளுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை அவரது நண்பர் அர்ஜுன் ஓட்டினார். பள்ளிப்புறம் அருகே வந்தபோது மரத்தின் மீது கார் மோதியது. பாஸ்கர் உட்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில், அன்றைய தினமே தேஜஸ்வினி இறந்தார். அக்டோபர் 2ம் தேதி பால பாஸ்கரும் இறந்தார். பல நாள் சிகிச்சைக்கு பிறகு பாஸ்கரின் மனைவி லட்சுமியும், டிரைவர் அர்ஜூன் இருவரும் உடல்நிலை தேறினர். இந்த விபத்து தொடர்பாக பள்ளிப்புறம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, போலீசுக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டன. காரை டிரைவர் அர்ஜுன்தான்  ஓட்டினார் என பாஸ்கரின் மனைவி லட்சுமியும், விபத்து நடந்தபோது பால பாஸ்கர்தான் காரை ஓட்டினார் என அர்ஜுனும் போலீசில் முன்னுக்கு பின் முரணாக  கூறினர். இதனால், இந்த விபத்தில் மர்மம் இருப்பதாகவும், குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் பால பாஸ்கரின் தந்தை உண்ணி புகார் செய்தார். மேலும், பாலக்காட்டை சேர்ந்த ஒரு டாக்டருக்கு பால பாஸ்கர் பெருமளவில் பணம் கொடுத்தார். அதை திருப்பி கேட்டபோது அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சமயத்தில்தான் விபத்து  நடந்து பாஸ்கரும், அவரது மகளும் இறந்தனர். எனவே, இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கிறேன் எனவும் புகாரில் உண்ணி குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தங்கம் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு?
கேரளாவில் சமீபத்தில் தங்கம் கடத்திய வழக்கில் திருவனந்தபுரத்தை சேர்ந்த செரீனா, சுனில்குமார், பிரகாஷ் தம்பி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் பால பாஸ்கரின் நண்பரான விஷ்ணு உள்பட சிலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் கைதான பிரகாஷ் தம்பி, பால பாஸ்கர் நடத்தி வந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்துள்ளார். மேலும், பால பாஸ்கர் குடும்பத்துடன் குருவாயூர் கோயிலுக்கு செல்ல, விஷ்ணுதான் அர்ஜுனை டிரைவராக அனுப்பி வைத்துள்ளார்.

அதுபோல், பாலக்காட்டை சேர்ந்த  டாக்டரை விஷ்ணுதான் பால பாஸ்கருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால், இவர்களுக்கும் பால பாஸ்கர் சாவில் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து தங்கம் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர்.

Tags : Music Director ,Kerala Police , The road accident, music composer, considered dead, daughter mystery
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...