×

3 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்தது களக்காடு மலையில் பரவிய காட்டுத் தீ கட்டுக்குள் வந்தது: வனத்துறையினரின் அதிரடிக்கு பலன் கிடைத்தது

களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக பற்றி எரிந்த காட்டுத் தீ வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கையினால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. மாறாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் அனல் காற்று வீசுகிறது. அருவி, நீரோடைகளும் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. மரங்கள், செடி, கொடிகளும் காய்ந்தன. இந்நிலையில் கடந்த 30ம்தேதி மாலை களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பத்மநேரி பீட் வெள்ளிமலை வனப்பகுதியில் மின்னல் தாக்கியதால் திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள,மளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்படி, வனசரகர் புகழேந்தி தலைமையில் களக்காடு, திருக்குறுங்குடி வனசரகங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் முதல் கட்டமாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ எரிந்த இடம் மலை உச்சிப்பகுதி ஆகும்.வெள்ளிமலை வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ மண் பொத்தை, மூலவேங்கை வரை பற்றி எரிந்தது. 3 நாட்களாக எரிந்த காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர களக்காடு, திருக்குறுங்குடி, அம்பை சரகங்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மஞ்சுவிளை, மேலப்பத்தை, வடகரை, மேலமாவடி கிராம வனக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் உள்பட 100 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து மரக்கொப்புகளை வைத்து அடித்தும், மண், கற்களை அள்ளி போட்டும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ பற்றிய பகுதியில் கடும் வெப்பம் நிலவியது. காற்றின் வேகமும் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் மற்றும் அதிகாரிகளின் அதிரடி வியூகத்தினால் தீ அணைப்பு குழுவினர் முழூ வீச்சில் பணியை மேற்கொண்டனர். இதன் விளைவாக நேற்று (1ம்தேதி) இரவில் காட்டுத் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீயினால் வனவிலங்குகளுக்கோ, மரங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், புற்கள் மட்டுமே கருகியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுபோல கடந்த 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் வெள்ளிமலை சரகத்தில் பிடித்த காட்டுத் தீயானது 10 நாட்களுக்கு பிறகே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதுவும் மழை பெய்த பின்னரே தீ அணைந்தது. எனவே தற்போதும் மழை பெய்தால் தான் தீ கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வனத்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் 3 நாட்களிலேயே காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து வனத்துறை ஊழியர்களையும், பொதுமக்களையும் வனத்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags : forest ,Kalakkadu , Kalakkadu Mountain, Forest Fire, Forest, Benefit
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...