×

ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடநூல் வழங்கும் திட்டத்திற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடநூல் வழங்கும் திட்டத்திற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெண் குழந்தைகள், மகளிர் மற்றும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையிலும், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டும் வகையிலும், தமிழ்நாடு அரசின் மகளிர் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதரவற்ற பெண்கள், விதவைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினர் ஆகியோரை மேம்படுத்தவும், சமநிலை அடையவும் பல சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மற்றும் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவி திட்டம் ஆகிய திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பயன்பெற இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.24,000ல் இருந்து ரூ.72,000ஆக உயர்த்தி தமிழக அரசால் ஏற்கனவே உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

சமூக நல துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களுக்கான வருமான வரம்பினை மேலும் உயர்த்தினால், அதிக அளவு ஏழைகள் பயன்பெறுவர் என்பதால், திருமண நிதி உதவித் திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதை போலவே, சமூக நல துறையின் கீழ் செயல்படும் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டம், தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், தொழிற்பயிற்சி நிலையங்களில் அனுமதி மற்றும் மூன்றாம் பாலினர் நலத்திட்ட உதவிகள் ஆகிய திட்டங்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.24,000ல் இருந்து ரூ.72,000ஆக உயர்த்தி நிர்ணயித்து முதல்வர் உத்தரவிட்டார். இத்திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பினை உயர்த்துவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலான பயனாளிகள் பயனடைவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Free Textbook Scheme for Children of Poor Widows ,Chief Minister , Poor widow, child, free, textbook, ceiling, chief minister
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...