×

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு நாகை, திருவாரூரில் தடையை மீறி 30 இடங்களில் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடையை மீறி திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் 30 இடங்களில் போராட்டம் நடத்தினர். டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை எதிர்த்தும், திட்டத்தை கைவிடக்கோரியும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜூன் 1 (நேற்று) டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் 13 இடங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்ைல. தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மாசிலாமணி அறிவித்திருந்தார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று போலீஸ் தடையை மீறி 13 இடங்களில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி கீழப்பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமையில் போராட்டம் நடந்தது. இதே பகுதியில் சேரன்குளம் 3ம் சேத்தி, 4ம் சேத்தியிலும் போராட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், கொரடாச்சேரி, குடவாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் மன்னார்குடி கீழப்பாலம் அருகே உள்ள அய்யனார்குளத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். திருவாரூர் மாவட்டத்தில் தடைமீறி போராட்டம் நடந்ததால், போராட்டம் நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. அதேசமயம் நாகை மாவட்டத்தில் போராட்டம் நடத்த போலீசார் எவ்வித தடையும் விதிக்கவில்லை. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட 17 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

600 கிமீ மனித சங்கிலி போராட்டம்:
ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை, கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்ட திட்டங்களை கைவிடக்கோரியும் காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரியும், வரும் 12ம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்திலிருந்து புதுச்சேரி, திருவாருர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் வரையிலும் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 600 கிமீ தூரம்  பேரிழப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடக்க உள்ளது. இதற்கான ஆதரவை அனைத்து தரப்பு மக்களிடமும் பெறும் நோக்கில் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கினர்.

Tags : places ,protest ,Thiruvarur , Hydro carbon project, resistance, Nagage, Tiruvarur, bans
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி