×

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திரண்டனர்... போலீஸ் தடை மீறி விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடையை மீறி திருவாரூர், நாகையில் இன்று விவசாயிகள் 30 இடங்களில் போராட்டம் நடத்தினர். மன்னார்குடி அருகே குளத்தில் இறங்கி கோஷம் எழுப்பினர். டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை எதிர்த்தும், திட்டத்தை கைவிடக்கோரியும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்கள் ஒப்பாரி வைத்து கும்மியடித்தல், குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று கோஷமெழுப்புதல், விளை நிலங்களில் நின்று ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் வரும் ஜூன் 12ம் தேதி இத்திட்டத்தை எதிர்த்து, மரக்காணத்தில் துவங்கி ராமேஸ்வரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் 600 கிமீ நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

அதேபோல் ஜூன் 1 (இன்று) டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 13 இடங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வந்தது. ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் மாசிலாமணி அறிவித்திருந்தார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று போலீஸ் தடையை மீறி 13 இடங்களில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. திருவாரூர் பஸ் நிலையம் அருகில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மன்னார்குடி கீழப்பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமையில் போராட்டம் நடந்தது. இதே பகுதியில் சேரன்குளம் 3ம் சேத்தி, 4ம் சேத்தியிலும் போராட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகில் முருகையன், கோட்டூர் கடைத்தெருவில் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, கொரடாச்சேரி வெண்ணாற்று பாலம் அருகில் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், குடவாசல் பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் சுப்ரவேல், கூத்தாநல்லூர் கடைத்தெருவில் நகர செயலாளர் சுதர்சன், நன்னிலம் பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் கவுதமன், வலங்கைமான் கடைத்தெருவில் விவசாய சங்க மாவட்ட தலைவர் ரெங்கராஜன், நீடாமங்கலம் கடைத்தெருவில் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் மன்னார்குடி கீழப்பாலம் அருகே உள்ள அய்யனார்குளத்தில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். விவசாய சங்க நகர தலைவர் ராஜ்குமார், செயலாளர் கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கலைசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெண்கள் கைகளில் காலி மண்பானைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். திருவாரூர் மாவட்டத்தில் தடைமீறி போராட்டம் நடந்ததால், போராட்டம் நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதேசமயம் நாகை மாவட்டத்தில் போராட்டம் நடத்த போலீசார் எவ்வித தடையும் விதிக்கவில்லை. கருப்பு கொடி வைத்திருந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட 17 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் காலையில் போராட்டம் நடந்தது. ஒரு சில இடங்களில் மாலை போராட்டம் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் தடையை மீறி போராட்டம் நடந்தாலும் போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.

Tags : peasant fighters , Hydro carbon, protest, farmers, fight
× RELATED விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க...