×

விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு : வெட்டிய குழிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்

பென்னாகரம்: பென்னாகரம் அருகே விளைநிலங்கள் வழியாக, மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், வெட்டிய குழிக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நல்லம்பள்ளி ஒன்றியம், அரிச்சந்திரன் கிராமத்தில் விவசாய நிலங்கள் வழியாக பவர்கிரிட் நிறுவனம் சார்பில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அங்கு வந்த நல்லம்பள்ளி தாசில்தார் தமிழரசன் மற்றும் போலீசார் உதவியுடன் 2 பொக்லைன் வாகனங்கள் மூலம், நிலத்தில் குழி தோண்டும் பணியை பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து, உயர் மின்கோபுரம் அமைப்பு எதிர்ப்பு கூட்டமைப்பினர் கேஜி கருவூரான் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள், அந்த குழிக்குள் இறங்கி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கு வந்த பென்னாகரம் இன்ஸ்பெக்டர் பெரியார், சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேசிய தாசில்தார் தமிழசரன், இந்த இடம் யாருடையது என்பது என்றே தெரியாத நிலையில், எப்படி நஷ்ட ஈடு வழங்க முடியும்? என்றார். இதனால் கோபமடைந்த விவசாயிகள் எங்களோடு பலமுறை பேசிவிட்டு, தற்போது இப்படி கூறுகிறீர்களே என்று கூறி, தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தருவதாக பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள் கூறினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த விவசாயிகள், மேற்கொண்டு பணிகளை தொடர விடாமல், விவசாய நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயி ராமமூர்த்தியின் மனைவி கூறுகையில், ‘நாங்கள் ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்துள்ளோம். இந்த நிலத்தில் முழுவதுமாக உயர் மின்கோபுரம் அமைக்கப்படுகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் முழுவதுமாக பறிபோகிறது. தற்போது இந்த நிலத்தில், அரை ஏக்கரில் மஞ்சள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், பூந்தோட்டம் அமைத்துள்ளோம். இதை முழுவதுமாக எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டால், எப்படி வாழ்வது என்றே தெரியவில்லை. நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை,’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mining area ,cutting pit ,peasant fighters , Farmland Struggle, Power Tower, Farmers Struggle
× RELATED கோபி அருகே மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் போராட்டம்