×

கருங்கலில் மாயமான மாணவிக்கு இன்று மருத்துவ பரிசோதனை... கடத்தலில் பலருக்கும் தொடர்பு

கருங்கல்: மாயமான கருங்கல் மாணவி சென்னையில் மீட்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த 23 வயது நிரம்பிய கல்லூரி மாணவி, திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மாயமானார். இது குறித்து மாணவியின் உறவினர்கள் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், மேல் விசாரணை எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இது தொடர்பாக எஸ்.பி.யை சந்தித்து மனு அளித்தனர். இதனால் குளச்சல் ஏ.எஸ்.பி. விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் கல்லூரி மாணவியின் மொபைல்போனுக்கு வந்த அழைப்புகளின் அடிப்படையில் விசாரணை நடந்தது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி, சென்னையில் இருந்து தனது கல்லூரி பேராசிரியை ஒருவருக்கு போன் செய்து, தன்னுடைய சான்றிதழ்கள், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை தருமாறு கூறியிருந்தார். அப்போது கல்லூரி மாணவியுடன் மேலும் ஒரு பெண் பேசினார். இந்த நிலையில் மாணவியின் உறவினருக்கு சென்னையில் இருந்து வாலிபர் ஒருவர் திடீரென போன் செய்து, மாணவி பற்றிய விவரத்தை கூறி சென்னையில் சுற்றி திரிந்த அவரை நாகர்கோவிலுக்கு பஸ் ஏற்றி அனுப்பி உள்ளதாக கூறினார். ஆனால் மாணவி வந்து சேரவில்லை.

மீண்டும் அந்த வாலிபரின் மொபைல் போனை தொடர்பு கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். எனவே வாலிபரின் பிடியில் தான் மாணவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபரின் மொபைல் எண்ணை ஆய்வு செய்தனர். அப்போது அது சென்னை முகவரியில் இருந்தது. கருங்கல் போலீசார் சென்னை விரைந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் சென்னையில் போலீஸ்காரர் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது, வேளச்சேரி பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணின் பெயரை கூறினார். அந்த பெண்ணையும் போலீசார் பிடித்தனர். இவர்கள் இருவரையும் கருங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். போலீஸ்காரரிடம், கருங்கல் காவல் நிலையத்தில் வைத்தும், அந்த பெண்ணிடம் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்தும் விசாரணை நடந்தது. இதில் இவர்கள் இருவரும், சென்னையில் தனியாக சுற்றி திரியும் பெண்களை வளைத்து, அவர்களிடம் இருந்து பணம், நகைகள் பறிப்பது தெரிய வந்தது. அந்த வகையில் தான் கருங்கல் கல்லூரி மாணவியையும் அழைத்து சென்று நகை, பணத்தை பறித்துள்ளனர். செல்போன் அழைப்பு மூலம் போலீசார் நெருங்கி விட்டனர் என தெரிந்ததும், கல்லூரி மாணவியை உடனடியாக தங்கள் பிடியில் இருந்து இவர்கள் விடுவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த இளம்பெண்ணை அங்குள்ள போலீசார் பிடித்துள்ளனர்.

இளம்பெண்ணிடம் நடந்த விசாரணையில் அவர் மாயமான கருங்கல் கல்லூரி மாணவி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவியை சென்னையில் இருந்து போலீசார் கருங்கல் அழைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த கல்லூரி மாணவியிடம் விசாரணை நடந்தது. மேலும் குளச்சல் ஏஎஸ்பி கார்த்திக் மாணவியிடம் விசாரணை நடத்தினார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. மாணவி கடத்தில் விவகாரத்தில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாணவியின் உறவினர்களிடம் போலீசார் விபரங்கள் சேகரித்தனர். மேலும் மாணவியை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு பெற்றோருக்கு போலீசார் அறிவுரை கூறினார். ஆனால், மகள் மாயமாகி பல நாட்கள் ஆகிவிட்டன. எனவே உரிய நடவடிக்கை எடுக்கும்வரை நாங்கள் மகளை வீட்டுக்கு அழைத்து செல்ல மாட்டோம். இந்த கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த மாணவியை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை அந்த மாணவிைய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Tags : examination ,student ,kidnapping , Karungal, medical examination, kidnapping, student
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்