×

தேர்தலில் அதிமுக படுதோல்வி எதிரொலி தேர்தல் டிஜிபி மண்டபம் முகாமுக்கு மாற்றம்: மேலும் 18 போலீஸ் அதிகாரிகளும் மாற்றம்

சென்னை: தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், தேர்தல் டிஜிபி அசுதோஷ்  சுக்லாவை மண்டபம் முகாமுக்கு தூக்கியடித்துள்ளனர். மேலும், 4 டிஜிபிக்கள்  உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம்  செய்து தமிழக அரசின்  உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்  நடந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. மக்களவை தேர்தலில்  தேனியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. 22 தொகுதி சட்டப்பேரவை  இடைத்தேர்தலில் வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி  பெற்றது.  டெல்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.  இதற்காக 2 நாட்களாக டெல்லியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  சென்னை திரும்பினார்.  தேர்தல் தோல்வியால் டெல்லியில் அவருக்கு உரிய  மறியாதை கிடைக்கவில்லை என்றும், மற்ற கூட்டணிக் கட்சிகளை விட, அதிமுகவினர்  வேண்டா வெறுப்பாகவே பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால்  சென்னைக்கு நேற்று திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தோல்வி  குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது சில ஐபிஎஸ் அதிகாரிகள்,  டிஜிபி அசுதோஷ் சுக்லா, தேர்தல் நேரத்தில் நேர்மையாக  செயல்பட்டார். ஆளும்  கட்சியினரை தவறு செய்ய பல இடங்களில் அனுமதிக்கவில்லை. உளவுத்துறை ஐஜி  சத்தியமூர்த்தி, மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா ஆகியோர் ஆளும் கட்சிக்கு  ஆதரவாக செயல்படுவதால் அவர்களை மாற்ற  வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு  கடிதம்
எழுதிவிட்டார். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், மற்ற  அதிகாரிகள் இதனால் பயந்து விட்டனர். எனவே, அவரை தூக்கியடிக்க வேண்டும்  என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் தேர்தல் டிஜிபியாக இருந்த அசுதோஷ்  சுக்லா, மண்டபம் அகதிகள் முகாம் பாதுகாப்பு அதிகாரியாக அதிரடியாக  மாற்றப்பட்டார். தீவிரவாதிகளால் அவரது உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக  உளவுத்துறை கூறியுள்ளதால், அவருக்கு  சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  

இந்த நேரத்தில் அவரை மண்டபம் அகதிகள் முகாமுக்கு தமிழக அரசு அதிரடியாக  மாற்றியுள்ளது. இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தமிழக  அரசுதான் பொறுப்பு என்று நேர்மையான  போலீஸ் அதிகாரிகள் மத்திய அரசுக்கு  புகார் கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, திமுக  ஆட்சியில் செல்வாக்காக இருந்த அதிகாரிகளும் இந்த மாற்றத்தில் தப்பவில்லை.  கடந்த 8 ஆண்டுகளாக அவர்கள் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலர்  நேர்மையான, திறமையான அதிகாரிகள். எந்தக்  கட்சிக்கும் ஆதரவாக இல்லாமல்  நேர்மையாக இருப்பார்கள். இதனால்தான் அவர்கள் முக்கியமான பதவிகளில் திமுக  ஆட்சியின்போது அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அவர்களையும் தற்போதைய தேர்தல்  தோல்வி காரணமாக, டம்மியான  பதவிகளுக்கு தூக்கியடித்துள்ளனர்.

இதுகுறித்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள உத்தரவு
பெயர்    பழைய பதவி    புதிய பதவி
தமிழ்செல்வன்    சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஜிபி    சென்னை மின்வாரிய விஜிலன்ஸ் டிஜிபி
கரன் சின்ஹா    சென்னை, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு டிஜிபி    மாநில குற்ற ஆவண காப்பகம் டிஜிபி
சங்காராம் ஜாங்கிட்    சென்னை போக்குவரத்து கழக விஜிலன்ஸ் டிஜிபி    கும்பகோணம் போக்குவரத்து கழக விஜிலன்ஸ் டிஜிபி
அசுதோஷ் சுக்லா    தேர்தல் டிஜிபி     ராமநாதபுரம் அகதிகள் மண்டபம் டிஜிபி
விஜயகுமார்    சட்டம் ஒழுங்கு (சிறப்பு) டிஜிபி    சென்னை ஊழல் மற்றும் லஞ்ச
ஒழிப்புத்துறை டிஜிபி
சீமா அகர்வால்     மாநில குற்ற ஆவண காப்பகம் கூடுதல் டிஜிபி    சென்னை தலைமையிடம் கூடுதல் டிஜிபி
ரவி    சென்னை தலைமையிடம் கூடுதல் டிஜிபி    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான
குற்றம் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி
ஷகில் அக்தர்    சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி    சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி
அபாஸ் குமார்    சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி    சிறைத்துறை கூடுதல் டிஜிபி
சந்திப்  ராய் ரத்தோர்    ஈரோடு, சத்தியமங்கலம் சிறப்பு
அதிவிரைவுப்படை கூடுதல்  டிஜிபி    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம்
கூடுதல் டிஜிபி
சுனில்  குமார்    தமிழ்நாடு சீருடைப்பணியாளர்
தேர்வாணையம் கூடுதல் டிஜிபி    தமிழ்நாடு ஆவின் நிறுவன   
முதன்மை விஜிலன்ஸ் கூடுதல் டிஜிபி
சங்கர் ஜூவால்    தமிழ்நாடு ஆவின் நிறுவன சிறப்பு
விஜிலன்ஸ் கூடுதல் டிஜிபி    சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி
அசோக்குமார் தாஸ்    சென்னை மண்டல சிறப்பு புலனாய்வுப்பிரிவு
கூடுதல் டிஜிபி    ெசன்னை தொழில்நுட்ப பிரிவு
கூடுதல் டிஜிபி
ஜெயந்த் முரளி    சென்னை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு
கூடுதல் டிஜிபி    சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி
செந்தாமரைக்கண்ணன்    காத்திருப்போர் பட்டியல்    சென்னை தலைமையிட ஐஜி
ராஜேஸ்வரி    சிபிசிஐடி எஸ்பி    சென்னை சிலை கடத்தல்
தடுப்பு பிரிவு எஸ்பி
பிரமோத் குமார்    ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம் ஐஜி    சென்னை போக்குவரத்து மற்றும்
சாலை பாதுகாப்பு ஐஜி
முருகன்    சென்னை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஐஜி    சென்னை பொருளாதார
குற்றப்பிரிவு ஐஜி
ஜெயலட்சுமி    சென்னை வர்த்தக குற்றப்புலனாய்வு பிரிவு சிஐடி    சென்னை  குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு
எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமிஷனர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



Tags : election ,defeat ,AIADMK ,DGP Hall ,police officers , The election ,AIADMK,DGP , 18 more police officers changed
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...