×

மோடி வசம் அணுசக்தி, விண்வெளி உட்பட முக்கிய துறைகள் புதிய அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு

புதுடெல்லி: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. பழைய அமைச்சர்கள் சிலரின் இலாகாக்கள் மாறின. சிலருக்கு அதே துறை மீண்டும் கிடைத்தது. பா.ஜ தலைவர் அமித்ஷாவுக்கு உள்துறையும், நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறையும், ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத் துறையும், ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டன. மக்களவை தேர்தலில் பா.ஜ கட்சி தனிப் பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வென்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 2வது பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில், பிரதமராக மோடி பதவி ஏற்றார்.  கேபினட் அமைச்சர்கள் 24 பேரும், தனி பொறுப்பு அமைச்சர்கள் 9 பேரும், இணை அமைச்சர்கள் 24 பேரும் பதவி ஏற்றனர். இந்நிலையில் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. பிரதமர் மோடி வசம்      மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, முக்கிய கொள்கைகள் மற்றும்  இன்னும் ஒதுக்கப்படாத துறைகள் சென்றன. உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டது. எல்லோரும் எதிர்பார்த்தது போல் அமித் ஷாவுக்கு உள்துறை ஒதுக்கப்பட்டது.

யாரும் எதிர்பாராத வகையில், தமிழகத்தைச்  சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. நாட்டின் 2வது பெண் ராணுவ அமைச்சர் என்ற பெருமையை இவர் கடந்த ஆட்சியில் பெற்றார்.  தற்போது இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக, நிதித்துறைக்கு பொறுப்பேற்கும்  பெண் மத்திய அமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்துள்ளது. மிகவும் முக்கியமான  வெளியுறவுத் துறைக்கு, அந்தத் துறையில் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய  தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கரை மோடி நியமித்தார். ஒரு துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர், அதே துறையில் மத்திய  அமைச்சர் ஆக்கப்பட்டது இதுவே முதல் முறை. பியூஸ் கோயலுக்கு அவர் ஏற்கனவே வகித்த  ரயில்வேத் துறையும், கூடுதலாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் இவர் சிறப்பாக செயல்பட்டார். ரயில் பாதுகாப்பு, நவீனமயம் போன்றவற்றில் இவர் அதிக கவனம் செலுத்தினார்.  இவரது ஆட்சி காலத்தில் ரயில் விபத்துக்கள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தன.  மேலும் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், இதரவழிகளில் ரயில்வே வருவாயை பெருக்குவதில் இவர் கவனம் செலுத்தினார். அதனால் ரயில்வே துறை மீண்டும் இவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

நிதின் கட்கரிக்கு அவர் ஏற்கனவே வைத்திருந்த சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைகளில் சிறப்பாக செயல்பட்டார். இதனால் இந்த முறையும் அவருக்கு அதே துறைகள் ஒதுக்கப்பட்டன. ராம்விலாஸ் பஸ்வானுக்கு ஏற்கனவே வகித்த நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஒதுக்கப்பட்டது. ரவிசங்கர் பிரசாத்துக்கும் ஏற்கனவே வகித்த சட்டம் மற்றும் நீதித்துறை ஒதுக்கப்பட்டது. அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதலுக்கு அவர் ஏற்கனவே வகித்த உணவு பதப்படுத்துதல் துறை வழங்கப்பட்டது. உ.பி அமேதி தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை போராடி வீழ்த்திய ஸ்மிருதி இராணி மத்திய அமைச்சரவையில் மிக முக்கியமான இடம் அளிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் அவர் ஏற்கனவே வகித்த ஜவுளித்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டது.

பிரகாஷ் ஜவடேகருக்கு சுற்றுச்சூழல், வனத்துறை, பருவநிலை மாற்றம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  தர்மேந்திர பிரதானுக்கும் அவர் ஏற்கனவே வகித்த பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை ஒதுக்கப்பட்டது. முக்தர் அப்பாஸ் நக்விக்கு, சிறுபான்மையினர் நலன் ஒதுக்கப்பட்டது. டாக்டர்.ஜித்தேந்திர சிங்குக்கு அவர் ஏற்கனவே வகித்த பிரதமர்  அலுவலகம், மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும்  ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறைகளும், கூடுதலாக வடகிழக்கு மண்டல வளர்ச்சி துறையும் ஒதுக்கப்பட்டது. இலாகா ஒதுக்கப்பட்ட பெரும்பாலான அமைச்சர்கள் நேற்றே தங்கள் பொறுப்பை ஏற்றனர். ஒரு சிலர் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளனர்.

மத்திய அமைச்சர்களின் இலாகா

1 பிரதமர் மோடி: மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, முக்கிய கொள்கைகள் மற்றும் இன்னும் ஒதுக்கப்படாத துறைகள்.    

கேபினட் அமைச்சர்கள்


1. ராஜ்நாத் சிங் -பாதுகாப்புத் துறை
2. அமித்ஷா - உள்துறை
3. நிதின் கட்கரி - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைகள். * கடந்த முறை வகித்த பதவி.
4. சதானந்த கவுடா - ரசாயானம் மற்றும் உரம்
5. நிர்மலா சீதாராமன் - நிதித்துறை மற்றும் கம்பெனிகள் நிர்வாகத் துறை.
6. ராம்விலாஸ் பஸ்வான் - நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை. * கடந்த முறை வகித்த பதவி.
7. நரேந்திரசிங் தோமர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகள்.
8. ரவிசங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் நீதி, தொலைத் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம்.  *கடந்த முறை வகித்த பதவி
9. ஹர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் * கடந்த முறை வகித்த பதவி.
10. தவார் சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை
11. ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை * வெளியுறவுத் துறை செயலாளராக பணியாற்றிய முதல் அமைச்சர்.
12. ரமேஷ் பொக்ரியால் - மனிதவள மேம்பாட்டுத் துறை.
13. அர்ஜூன் முண்டா - பழங்குடியினர் நலத்துறை.
14. ஸ்மிருதி இராணி - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை * ஜவுளித்துறை கடந்த முறை வகித்த பதவி.
15. ஹர்ஸ் வர்தன் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியில் துறை.
16. பிரகாஷ் ஜவடேகர் - சுற்றுச்சூழல், வனத்துறை, பருவநிலை மாற்றம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை.
17. பியூஸ் கோயல் - ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை * கடந்த முறை வகித்த பதவி.
18. தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை.* கடந்த முறை வகித்த பதவி.
19. முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலன் * கடந்த முறை வகித்த பதவி
20. பிரகலத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரத் துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை.
21. மகேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு திறன் துறை.
22. அரவிந்த் சாவந்த் - கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனம்
23. கிரிராஜ் சிங் - கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை.
24. கஜேந்திர சிங் ஷெகாவத் - நீர்வளத் துறை.
 

இணை அமைச்சர்கள் ( தனிப் பொறுப்பு)

1. சந்தோஷ் குமார் கங்வார் - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.
2. ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியல் மற்றும் திட்ட அமல்படுத்துதல், திட்டமிடல் துறை.
3. ஸ்ரீபத்  நாயக் - ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா, ஓமியோபதி (ஆயுஸ்), பாதுகாப்புத் துறை. * கடந்த முறை வகித்த பதவி.
4. டாக்டர்.ஜித்தேந்திர சிங் - வடகிழக்கு மண்டல வளர்ச்சி, பிரதமர் அலுவலகம், மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித் துறை. * கடந்தமுறை வகித்த பதவி.
5. கிரண் ரிஜிஜூ - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை.
6. பிரகலத் சிங் படேல் - கலாச்சாரம், சுற்றுலாத் துறை.
7. ராஜ்குமார் சிங் - மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் திறன் துறை.
8. ஹர்தீப் சிங் பூரி - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை, விமான போக்குவரத்து, வர்த்தக மற்றும் தொழில் துறை.
9. மன்சுக் மாண்டவியா - கப்பல் போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத்துறை.

இணை அமைச்சர்கள்

1. பாகன்சிங் குலாஸ்தி - எஃகு துறை இணை அமைச்சர்
2. அஸ்வினி குமார் சூபே - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
3. அர்ஜூன் ராம் மேக்வால் - நாடாளுமன்ற விவகாரத்துறை, கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனம்
4. வி.கே.சிங் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை
5. கிரிஷன் பால் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
6. தான்வே ராவ்சாஹேப் தாதாராவ் - நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை
7. கிஷன் ரெட்டி - உள்துறை
8. பர்ஷோட்டம் ரூபாலா - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை
9. ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
10. சாத்வி நிரஞ்சன் ஜோதி - ஊரக மேம்பாட்டு துறை
11. பாபுல் சுப்ரியா - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை
12. சஞ்சீவ் குமார் - கால்நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத்துறை
13. தாத்ரே சஞ்சய் சாம்ராவ் - மனிதவள மேம்பாடு, தொலைத் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை
14. அனுராக் சிங் தாகூர் - நிதி, கம்பெனிகள் விவகாரங்கள் துறை
15. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா - ரயில்வே துறை
16. நித்தியானந்த் ராய் - மத்திய உள்துறை
17. ரத்தன்லால் கட்டாரியா - நீர்வளம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
18. வி.முரளிதரன் - வெளியுறவு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
19. ரேணுகா சிங் - பழங்குடியினர் நலத்துறை
20. சோம் பிரகாஷ் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை
21. ராமேஷ்வர் டெலி - உணவு மற்றும் பதப்படுத்துதல் தொழில் துறை
22. பிரதாப் சந்திர சாரங்கி - சிறு, குறு, நடுத்தர தொழில், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன் வளம்
23. கைலாஷ் சவுத்ரி - வேளாண், விவசாயிகள் நலன்

Tags : Modi ,departments , Modi's allocation, new portfolios ,nuclear power and space
× RELATED நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக...