×

கம்பம் நகரில் களைகட்டும் போதை மாத்திரை விற்பனை

* கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கம்பம் :  கம்பம் நகரில் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கென செயல்படும் தனியார் மெடிக்கல் ஷாப்கள் மீது நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கம்பம் நகரம் கேரளாவிற்கு மிக அருகாமையில் உள்ளது. இங்கு அதிக அளவில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு வர்த்தகத்திற்காக வருகின்றனர். மேலும் கம்பம் நகரைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் மிக முக்கிய தேவையான தனியார் கிளீனிக் அதிகம் உள்ளன. இதில் தனியார் மெடிக்கல் ஷாப்கள் சில மட்டும், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மெடிக்கல்களில் சட்டவிரோதமாக போதை தரக்கூடிய இருமலுக்கு பயன்படுத்தப்படும் சில டானிக், போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை பள்ளி, கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் போதைக்கு அடிமையாகி தினந்தோறும் வீடுகளில், தெருக்களில் பிரச்னை செய்வது அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம், டாக்டர்கள் பரிந்துரைத்த சீட்கள் அல்லாமல் தங்களது இஷ்டத்திற்கு விற்பனை செய்வது தான். போதை மாத்திரைக்கு அடிமையாகும் இளைஞர்கள் அளவிற்கு அதிகமான வேகத்தில் டூவீலரில் சென்று விபத்தில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. மது, கஞ்சா உள்ளிட்டவை உட்கொண்டால் அதன் வாசனை வெளியே தெரிந்துவிடும். ஆனால் போதை மாத்திரையோ அல்லது இருமல் டானிக் வாங்கியோ குடித்தால் வாசனை வெளியே தெரியாது. இதனால் இளையதலைமுறை பலர் இதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே உடனடியாக இதனை தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். தேனி மாவட்ட அளவில் தனியார் மெடிக்கல் ஷாப் மற்றும் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளை கண்காணித்திட மருந்தியல் ஆய்வாளர் (ட்ரக்இன்ஸ்பெக்டர்) உள்ளார். இவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக தெரிகிறது. எனவே, அடுத்த தலைமுறையான இளைஞர்களை போதையில் இருந்து தடுத்திட அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.


கவுன்சலிங் சென்டர் தேவை

இதுகுறித்து கம்பத்தை சேர்ந்த அசாதிக் கூறுகையில், `` கம்பத்தை மையமாக கொண்டு அதிக அளவில் கஞ்சா, கள்ள மார்க்கெட்டில் பிராந்தி, தற்போது போதை மாத்திரைகள் விற்பனை நடக்கிறது. இதனை கண்காணித்து தடுக்கவேண்டிய இடத்தில் உள்ள சுகாதாரத்துறை மாவட்ட அளவிலான அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மருந்துகள் விற்பனை கண்காணிப்பில் டிரக் இன்ஸ்பெக்டரும் மவுனம் காப்பதால் உடனடியாக தேனி கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். போதையில் சிக்கியவர்களுக்கு கவுன்சலிங் சென்டர் கம்பத்தில் கட்டாயம் அமைக்க வேண்டும். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகாராக கொண்டு சென்றாலும், படிக்கின்ற இளைஞர்கள் என்பதால் கரிசனம் காட்டப்படுவதால் தரிகெட்ட இளைஞர்களால் பிரச்னையின் தீவிரம் கம்பத்தில் குற்றச்செயல்களை அதிகரித்து வருகிறது’’ என்று கூறினார்.

Tags : Pampa , Cumbum ,Addiction Tablet ,sale. officials not taking action,
× RELATED சென்னை டூ பம்பா வரை சபரிமலைக்கு...