×

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் பொய் வழக்கு கணவர் மற்றும் இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமை செயலக பெண் ஊழியர் மனித உரிமை ஆணையத்தில் புகார்

சென்னை: கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் பொய் வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டர், உடந்தையாக இருந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலக பெண் ஊழியர், மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகம், நிதித்துறையில் உதவியாளராக புணிபுரிந்து வரும் மகாலட்சுமி என்பவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது: நான், தமிழக நிதித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர் தர்மகண் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிலி அரசு பள்ளியில் உடற்கல்வி உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். எனக்கு திருமணாகி 20 ஆண்டுகள் ஆகிறது. அரசு வேலை கிடைத்த நாள் முதல் என் கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னை கொடுமைப்படுத்தினார். என்னுடைய குழந்தைகளுக்காக அவருடன் வாழ்ந்தேன்.

இந்நிலையில் என்னை மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்தார். மேலும் சில வருடங்களுக்கு முன், அவர் பணிபுரிந்த பள்ளி மாணவியுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னுடன் பிரச்னை செய்து வந்தார். அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஊர் பஞ்சாயத்தில் கொண்டுபோய் பஞ்சாயத்தின் மூலமாக இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். தற்போது எங்கள் வீட்டில் மேல் வாடகைக்கு குடியிருந்து வரும் சர்மிளா என்ற பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, ஒரே அறையில் இருக்குமாறு என்னை அழைத்தார். என் முன்னிலையிலேயே அவருடன் உறவு வைத்துக் கொள்வார். இது எனக்கு பிடிக்காமல் நான் அவரை விட்டு அரசு ஊழியர்கள் குடியிருப்புக்கு சென்று விட்டேன்.
 
இதற்கிடையில் கடந்த 22ம் தேதி எனது வீட்டிற்கு வந்தபோது கணவனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் சர்மிளா மற்றும் அவருடைய மகள் 2 பேரும் சேர்ந்து என்னை தாக்கினார்கள். அதனால் அங்கிருந்து புறப்பட்டு அரக்கோணம் வீட்டிற்கு சென்றேன். அங்கேயும் வந்து என்னுடைய கணவரின் அண்ணனும், அண்ணியும் என்னை அடித்து வெளியே போ என்று விரட்டி விட்டனர். இதையடுத்து அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நான் அடித்ததாக என் மீது புகார் அளித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் எந்த விசாரணையும் செய்யாமல் என்மீது வழக்கு பதிவு செய்தார்.

பின்னர் இன்ஸ்பெக்டர் என்னிடம் தொடர்பு கொண்டு உங்கள் கணவரும், சர்மிளா என்ற பெண்ணும் உங்கள் மீது புகார் கொடுத்துள்ளனர். அதனால் நீங்கள் எனக்கு செய்ய வேண்டியதை செய்தால் வழக்கு போடாமல் நிறுத்தி விடுகிறேன் என்று கூறினார். அதற்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் நேர்மையாக பார்த்துக் கொள்கிறேன், என்று சொன்னவுடன் போனை துண்டித்துவிட்டார். பிறகு விசாரணை செய்யாமல் என்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் என்பவரும் உடந்தையாக உள்ளார். எனவே பொய்வழக்கு கொடுத்த என்னுடைய கணவர், சர்மிளா மீதும் விசாரணை செய்யாமல் பொய் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. 


Tags : inspector ,Chief Executive Officer ,Human Rights Commission , Counterfeit, tycoon, lying case, husband, inspector, proper action
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...