×

‘பிரே ஃபார் நேசமணி’ உலக அளவில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆன வடிவேலு காமெடி

சென்னை: ‘பிரே ஃபார் நேசமணி’ என்ற ஹேஷ்டேக்குடன் நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி உலக அளவில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் படத்தை  நெட்டில் வெளியிட்டு இதற்கு  உங்கள் நாட்டில் பெயர் என்ன? என கேட்டிருந்தது.  அதைப்பார்த்த வடிவேலு ரசிகரும் இன்ஜினியருமான விக்னேஷ் பிரபாகர் என்பவர், ‘இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால்  டங், டங் என சத்தம் கேட்கும். இது கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில்  விழுந்ததால், அவர்  உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்’ என  கூறியிருக்கிறார். அவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து இதற்கு கமென்ட் போட ஒரு கட்டத்தில், ‘பிரே ஃபார் நேசமணி’ ஹேஷ்டேக் உருவாகி பரவ ஆரம்பித்தது. உலக அளவில் இது டிரெண்டிங் ஆக மாறியது.

2001ல் சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, தேவயானி நடித்த படம் பிரெண்ட்ஸ். இந்த படத்தில்  பங்களா தூய்மைப்படுத்தும் பணிக்கு ஆட்களை நியமிப்பார்கள். அந்த குழுவுக்கு வடிவேலுதான் தலைமை ஏற்று கான்ட்ராக்டராக வருவார். படத்தில் அவரது பெயர்தான் நேசமணி. குழுவில் விஜய், சூர்யா, சார்லி, ரமேஷ் கண்ணா உள்பட பலர் இருப்பார்கள். ஆணி அடிக்கும்போது ரமேஷ் கண்ணா சுத்தியலை தவறவிட, அது நேராக வடிவேலு தலையில் விழும். அவர் மயங்கி விழுவார். பாகிஸ்தான் நபர் கேட்ட கேள்விக்கு இந்த காட்சியை நினைவுபடுத்திதான் அந்த இன்ஜினியர் தமாஷாக பிரே ஃபார் நேசமணி என பதிவிட்டார். இதையடுத்து இந்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இந்த ஹேஷ்டேக்கை தொடர்ந்து அடுத்தடுத்து மீம்ஸ்கள் நிறைய வரத்தொடங்கிவிட்டது. ‘நேசமணி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது சாப்பாட்டு செலவு மட்டும் ₹1.5 கோடி’ என ஒரு மீம் வெளியாக, அதிமுகவை சேர்ந்த நடிகை சி.ஆர்.சரஸ்வதி, ‘மருத்துவமனையில் நேசமணி இட்லி சாப்பிட்டார்’ என கூறுவதுபோல் மற்றொரு மீம்ஸ் வெளியானது. இதுபோல் அடுத்தடுத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வரத்துவங்கியது.

இது குறித்து வடிவேலு கூறும்போது, ‘என்ன நடந்துச்சுன்னு தெரியல. உலக அளவுல நான் பிரபலமாகிட்டேன்னு சொன்னாங்க. பிரெண்ட்ஸ் படத்துல வர்ற நேசமணி கேரக்டர் இப்போதும் மக்கள் மனசுல நிக்குது. இது கடவுள் கொடுத்த பரிசுன்னுதான் சொல்லணும்’ என்றார். 2வது முறையாக பிரதமராக மோடி நேற்று பதவி ஏற்றார். இதுதான் டிரெண்டிங்கில் முதலிடத்தில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே எதிர்பாராதவிதமாக பிரே ஃபார் நேசமணி, நேசமணி யார் என்றெல்லாம் ஹேஷ்டேக்குகளும் மீம்ஸ்களும் டிவிட்டரில் நம்பர் ஒன் டிரெண்டிங் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Vadivelu , pray for nesamany
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு