×

திருமங்கலம் பகுதியில் வறண்டு வரும் கண்மாய்கள் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்

திருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் 42 பொதுப்பணித்துறை கண்மாய்களும் சொட்டு தண்ணீர் இன்றி வற்றி வறண்டுபோயுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் 42 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 18 யூனியன் கண்மாய்களும் உள்ளன. இதில் அம்மாபட்டி, புலியூர், சாத்தங்குடி உள்ளிட்ட கண்மாய்கள் எப்போதுமே தண்ணீர் இருக்கும். திருமங்கலம் பகுதியிலேயே மழைகாலங்களில் அடிக்கடி விரைவில் நிரம்பும் கண்மாய் என பெயர் எடுத்தது அம்மாபட்டி மற்றும் புலியூர் கண்மாய்கள். இந்தாண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் இந்த இரண்டு கண்மாய்களிலும் தண்ணீரின்றி கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது.

மேலும் உரப்பனூர், சிவரக்கோட்டை, கள்ளிக்குடி, வில்லூர், வடகரை, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதரம் இழந்து தவிக்கும் நிைல ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உரப்பனூர் கண்மாயை நம்பி பல ஏக்கர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தற்போது கண்மாயில் தண்ணீர் இல்லாது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கண்மாய்கள் அனைத்தும் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள 42 பொதுப்பணித்துறை கண்மாய்களும் இந்தாண்டு வறண்டுள்ளது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Tags : area ,Tirumangalam , Tirumangalam, farmers
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...