×

கெங்கவல்லி வனப்பகுதியில் கடும் வறட்சி எதிரொலி... தண்ணீர் தேடி ஊருக்குள் படையெடுக்கும் மான்கள்

கெங்கவல்லி: கெங்கவல்லி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள், நாய்களிடம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனப்பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க போதுமான வனக்காப்பாளர்கள் பணியில் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. கடந்த ஒரு மாத கால அளவில் கடும் வெயில் வாட்டி எடுக்கும் சூழ்நிலையில் வனவிலங்குகளுக்கு வனத்துறை சார்பில் ஆங்காங்கே காடுகளில் தண்ணீர் தொட்டி அமைத்து தண்ணீர் விடுவது வழக்கம். ஆனால், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள காடுகளில் இதுவரை ஒரு தண்ணீர் தொட்டி கூட அமைக்க வில்லை என்பது மன வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று நடுவலூர் தனியார் பள்ளி அருகில் தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் தெரு நாய்களிடம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இதனை மீட்ட வன காவலர்கள் பிரேதப் பரிசோதனைக்கு பின்பு புதைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் விலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர். அதேவேளையில், சாலையை கடக்கும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதும், அதனையும் தாண்டி ஊருக்குள் வரும்போது தெருநாய்களிடம் சிக்கி பலியாவதும் அதிகரித்துள்ளது. இதில், ஒருசில சம்பவங்கள் தான் வெளியில் தெரிகிறது. கடந்த 40 நாட்களில் கெங்கவல்லி மற்றும் வீரகனூர் பகுதியில் 5 புள்ளி மான்கள் தண்ணீர் தேடி வந்த இடத்தில் நாய்களிடம் சிக்கி உயிரிழந்துள்ளன. எனவே, வனவிலங்குகளின் உயிர்பலியை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வனவிலங்குகள் உயிரிழப்பது குறித்து கெங்கவல்லி அருகே கூடமலை பகுதியைச் சேர்ந்த பிரபு(29) என்பவர், தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம் புகார் மனு அளித்தார். அதில், வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வராத வகையில் காடுகளில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிரிவித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக அந்த மனுவை சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வன அதிகாரிகளிடம் கேட்டபோது, கெங்கவல்லி தாலுகாவில் பரவலாக வனப்பகுதி சூழ்ந்துள்ள நிலையில் தற்போது 19 பேர் பணியாற்ற வேண்டிய வனச்சரகத்தில் 7 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், கண்காணிப்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags : forest ,drought ,Kankavalli ,town invaders , Deens, water, drought
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ