×

கர்நாடகா கூட்டணி அரசை கவிழ்க்க பாஜ முயற்சிக்காது: எடியூரப்பா திட்டவட்டம்

பெங்களூரு: ‘‘கர்நாடகா கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜ ஈடுபடாது. ஆனால், ஆட்சி கவிழ்ந்தால் கண்டிப்பாக பாஜ ஆட்சி அமைக்கும்,’’ என  எடியூரப்பா கூறினார். கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மஜத.வை சேர்ந்த குமாரசாமி, முதல்வராக இருக்கிறார். இந்த ஆட்சியை ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் கவிழ்க்க பாஜ முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்காக, கூட்டணியை சேர்ந்த 2 கட்சி எம்எல்ஏ.க்களையும் இழுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இம்மாநில முன்னாள் முதல்வரும், கர்நாடகா பாஜ தலைவருமான எடியூரப்பா, பெங்களூருவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. இடைத்தேர்தல் நடப்பதை பாஜ.வும் விரும்பவில்லை. ஒருவேளை கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் பாஜ அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது.
 
ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். மஜத-காங்கிரஸ் தலைவர்கள் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், எந்த நேரத்திலும் கூட்டணி ஆட்சி கவிழும் நிலை ஏற்படலாம். ஆனால், பாஜ மட்டும் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாது. ஜூன் 5ம் தேதி பாஜ நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ளோம். இதில், கூட்டணி அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசனை  மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கான உரம், விதை வினியோகம், குடிநீர்  பிரச்னை, கால்நடைகளுக்கு தீவனம் வினியோகம் போன்றவை உட்பட மாநிலத்தின் பல்வேறு தேவைகள் குறித்தும், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Karnataka ,coalition government ,Ediyurappa , Karnataka, Yeddyurappa, Specimen
× RELATED கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள்...