×

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையால் பள்ளிகளை திறக்க கடும் எதிர்ப்பு

* குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலையில் மாணவர்களை வதைப்பதா?
* ஆசிரியர்கள், பெற்றோர் போர்க்கொடி

சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத அளவில், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதன் விளைவாக சராசரி மழை பொழிவை காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது. இதனால், தற்போது தமிழகத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மேட்டூர், வைகை, பாபநாசம், பவானிசாகர், கிருஷ்ணகிரி உட்பட 15 முக்கிய அணைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது.

குறிப்பாக, 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த 15 அணைகளில் தற்போது 28 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதை தவிர்த்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளில் 76 மில்லியன் கன அடி (0.7 டிஎம்சி) மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தமிழ்நாடு குடிநீர் வாரியம் தவித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகரில் 4  பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 2 குடம் மட்டுமே தண்ணீர் என்ற விகிதத்தில் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீரை குடிநீருக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால், 400 அடி போர்வெல் போட்ட பல இடங்களில் கூட தற்போது தண்ணீர் வரவில்லை. இதனால், குளிப்பதற்கு, குடிப்பதற்கு என்று தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் குடிநீர் கேன் வாங்கி அதை பல் துலக்குவதற்கும் மற்றும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு சில அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் வேறுவழியின்றி தினமும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை கொடுத்து ஒரு லோடு டேங்கர் லாரி தண்ணீர் பெற்று, தங்களது தொட்டிகளுக்கு தண்ணீரை ஏற்றி வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த மாதிரி குடியிருப்புகளில் கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வீட்டிற்கு எவ்வளவு குடம் தண்ணீர் செலவு செய்ய வேண்டும் என்பதை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குடியிருப்புவாசிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில், அதிக பணம் கொடுத்து தண்ணீர்பெற முடியாத நிலையில், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் பிரச்சனை காரணமாக பலர் வீடுகளை காலி செய்து விட்டு சென்று விட்டனர். அவர்கள் தண்ணீர் பிரச்சனை எங்கு இல்லை என்று தேடி பார்த்து அந்த பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், சிலர் வீட்டை காலி செய்ய மனமின்றி விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வீடுகளில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நிலை அதை விட மோசமாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் குடிநீர் வாரியம் மூலம் கிடைக்கும் நீரை நம்பித்தான் உள்ளது. தற்போது குடிநீர் வாரியம் வீடுகளுக்கு குடிநீர் தரவே தடுமாறி வரும் நிலையில் பள்ளிகளுக்கு எப்படி தண்ணீர் விநியோகிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், அந்த பள்ளிகளில் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காத நிலையில் பாத்ரூமை எப்படி சுத்தமாக வைத்திருக்க முடியும். அதே போன்று தனியார் பள்ளிகளில் மெட்ரோ வாட்டர் மற்றும் போர்வெல் மூலம் கிடைக்கும் நீரை நம்பி தான் உள்ளது. தற்போது நிலத்தடி நீர் மூலம் தண்ணீர் பெற முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் மெட்ரோ வாட்டர் குடிநீரும் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீருக்காக மாணவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு, நோய் தாக்குவதற்கும் வாய்ப்புள்ளது.

அதே போன்று தண்ணீரின்றி பாத்ரூமை சுத்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அந்த பாத்ரூமை பயன்படுத்தும் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வரும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க மாநில தலைவர் அருமைநாதன் கூறுகையில், ‘திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தற்போது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை உள்ளது.

இந்த சூழ்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் வசதி உள்ளதா என்பது குறித்து கல்வி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். குடிப்பதற்கு மட்டுமின்றி டாய்லெட் பயன்படுத்தவும் தண்ணீர் வேண்டும். அது இல்லாமல் பள்ளியை திறந்து மாணவர்களை கஷ்டப்படுத்த கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரின் கருத்தை கேட்டு பள்ளி திறப்பு தேதியை முடிவு செய்ய வேண்டும். மேலும், பள்ளிகளில் அனைத்து தேவைகளுக்கு தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை ஏற்படுத்திய பிறகு தான் பள்ளி திறப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

வைரஸ் நோய்கள் அபாயம்:
அப்போலோ மருத்துவமனை பொது மருத்துவர் சந்திரசேகர் சாண்டில்யா கூறியதாவது: உடலை சீராக வைத்துக்கொள்ள ஒரு மனிதன் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரை, 13 வயதுக்குகீழ் உள்ளவர்கள் 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வயதுக்கு ஏற்ப தண்ணீர் குடித்தால் மட்டுமே, தேவையற்ற உப்புகள், தாதுப்பொருட்கள் சிறுநீரில் இருந்து வெளியேறிவிடும். வியர்வை மூலம் 300 மி.லி தண்ணீர் உடலில் இருந்து வெளியேறும்.  

கடும் கோடை காலத்தில் 800 மி.லி வரை வியர்வை வெளியேறும். 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவில்லையென்றால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். கடும் வெயில் காலங்களில், தோல் வறண்டு போகாமல் இருக்க 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கடும் வெயில் காலங்களில் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். அவ்வாறு தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீர் அடர்த்தியாகிவிடும், அதனால் சிறுநீர் பாதையில் கிருமிகள் வளர ஆரம்பித்துவிடும். சிறுநீர் தொற்று ஏற்படும்.

தண்ணீர் குடிக்காமல் நேரடி வெயிலில் செல்லும் போது, தோல் வியாதிகள் ஏற்படும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் வெயில் காலத்தில் தான் வைரஸ் நோய்கள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொண்டை புண், சளி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இந்த பிரச்னைகளை தவிர்க்க பெரியவர்கள் 3 லிட்டரும், வெயில் காலங்களில் 3.5 லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும்.

Tags : schools ,opening ,Tamil Nadu , In Tamilnadu, fierce, water problem, open schools, strong protest
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!