×

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக குரல்கள் ஒலிக்கும் நிலையில் குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளுக்கு போலீஸ் மூலம் மிரட்டி காசோலை விநியோகம்: பரபரப்பு தகவல் அம்பலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் குழாய் பதிக்கப்பட உள்ள விளை நிலங்களின் உரிமையாளர்களுக்கு போலீஸ் மூலம் மிரட்டி காசோலை வழங்கப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை எதிர்த்தும், திட்டத்தை கைவிடக்கோரியும் விவசாயிகள், பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் வரும் ஜூன் 12ம் தேதி இத்திட்டத்தை எதிர்த்து, மரக்காணத்தில் துவங்கி ராமேஸ்வரம் வரை கடற்கரையோரம் 600 கிமீ நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதுதவிர பல்வேறு விவசாய மற்றும் பொது நல அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையே நாகை மாவட்டத்தில் மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிமீ தூரத்துக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மேமாத்தூரில் இருந்து நரிமணத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். காரணம் சாகுபடி செய்யப்பட்டுள்ள விளை நிலங்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. முடிகண்டநல்லூர், உமையாள்புரம், முக்குரும்பூர்,  மாத்தூர், மடப்புரம், வல்லம் போன்ற கிராமங்களில் பயிர்கள் நடப்பட்ட வயல்களில் குழாய் பதிப்பு பணி ஏற்கனவே நடந்தது. விவசாயிகள் எதிர்ப்பால், பல இடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.

பின்னர் போலீஸ் உதவியுடன், நிலங்களின் உரிமையாளர்களை மிரட்டி அவர்களுக்கு நிலத்துக்குரிய காசோலை வழங்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக பல இடங்களில் மீண்டும் பணிகள் துவங்கி உள்ளன. இன்று சாத்தனூர் கிராமத்தில் குழாய் பதிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இது தொடர்பாக விவசாய சங்கத்தினர் கூறுகையில், ‘‘நிலங்களில் குழாய் பதிக்க எல்லா விவசாயிகளும் ஒப்புக்கொண்டு விட்டனர். 20 சதவீத விவசாயிகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கெயில் நிறுவனம் சார்பில் தகவல்  பரப்பப்படுகிறது. இது உண்மையில்லை. போலீசாரை வைத்து மிரட்டி விவசாயிகளுக்கு காசோலை வழங்கப்பட்டு வருகிறது. வேறுவழியின்றி சில விவசாயிகள் அமைதியாக இருக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் எதிர்த்து போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே அனுமதி அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததில் இருந்து குழாய் பதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பது கச்சா எண்ணெய் கொண்டு செல்ல மட்டுமே என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ஹைட்ரோ கார்பன் கொண்டு செல்லவும் இந்த குழாய்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்போது மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களை போல், கெயில் நிறுவன குழாய் பதிக்கவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் டெல்டா பாலைவனமாகி விடும்’’ என்றனர்.

Tags : Hydro carbon, tube, farmer, police, check delivery
× RELATED பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று...