×

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் பதவியேற்பு

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக  எம்எல்ஏக்கள் 9 பேர், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பதவியேற்றுக்  கொண்டனர். தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி 38 மக்களவை மற்றும் காலியாக இருந்த 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து மேலும் காலியாக  இருந்த ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம்,  அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய  தொகுதிகளுக்கு, கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. கடந்த 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் 1 மக்களவை தொகுதி மற்றும் 9 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.  திமுக 37  மக்களவை மற்றும் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 9 பேரும் இன்று பதவி ஏற்க விருப்பம் தெரிவித்து சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட  சபாநாயகர்  தனபால், பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் வெற்றி பெற்ற (அரூர்)சம்பத்குமார், (மானமதுரை)நாகராஜன், (நிலக்கோட்டை)தேன்மொழி, (பாப்பிரெட்டிப்பட்டி) கோவிந்தசாமி, (பரமகுடி) சதன் பிரபாகர், (சாத்தூர்)ராஜவர்மன்,(சோளிங்கர்)சம்பத்,(சூலூர்)கந்தசாமி,  (விளாத்திகுளம்)சின்னப்பன். ஆகிய 9 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் தலைமைச் செயலகம் வந்தனர். தொடர்ந்து சபாநாயகர் அறையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொருவராக 9 பேரும் பதவி  ஏற்றுக்  கொண்டனர். முன்னதாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சபாநாயகரிடம் அளித்தனர். அதைத் தொடர்ந்து பதவி பிரமாண உறுதிமொழியை படித்து அதில் கையெழுத்திட்டனர். பதவி ஏற்ற பின்னர் ஒவ்வொரு எம்எல்ஏக்களும் சபாநாயகர்  தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.


Tags : AIADMK ,Palaniswamy ,O.Panniriselvam , Chief Minister Palaniswamy, Deputy Chief Minister O.Panniriselvam, AIADMK MLAs, sworn in
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...